திவால் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

தினகரன்  தினகரன்
திவால் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

புதுடெல்லி: திவால் மற்றும் நொடிப்பு நிலை சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.  தொழில் நிறுவனங்கள் திவாலாகும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, அதில் உள்ள தடைகளை அகற்றும் வகையில் புதிய விதிமுறைகளுடன் திவால் மற்றும் நொடிப்புநிலை சட்ட திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திவால் நிலையை சந்தித்த நிறுவனங்களை, ஏலத்தில் எடுத்து நடத்துபவர்கள், முந்தைய நிறுவனங்கள் செய்த குற்றத்துக்கான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடாத வகையில் இந்த சட்ட திருத்தம் பாதுகாப்பு அளிக்கும். இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.  இந்த சட்ட திருத்த மசோதாவை, மக்களவையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திவால் சட்டம் ஏற்கனவே 3 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் புதிய பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.காங்கிரஸ் வெளிநடப்புகுடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறிய பின் வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ள பிரச்னையை மக்களவையின் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிதான் வன்முறையை தூண்டுகிறது. அதற்கு அரசு கடும் கண்டனம் தெரிவிக்கிறது’’ என்றார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

மூலக்கதை