அயோத்தி நில வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தினகரன்  தினகரன்
அயோத்தி நில வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: அயோத்தி நில வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அயோத்தி தீர்ப்புஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 9ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட ராம் லாலா அமைப்பிடம் ஒப்படைக்கும்படியும், சன்னி வக்பு வாரியத்துக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 18 மறுபரிசீலனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சீராய்வு மனுக்கள்இதில் 9 மனுக்களை, இந்த வழக்குடன் ஏற்கனவே தொடர்புள்ளவர்களும், 9 மனுக்களை 3ம் நபர்களும் தாக்கல் செய்தனர். முதல் சீராய்வு மனுவை, சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக, முதன்முதலில் வழக்கு தொடர்ந்த சித்திகி என்பவர் சார்பில், அவருடைய வாரிசான மவுலானா சையது ஆஷாத் ரஷீத் தாக்கல் செய்தார். இவர், ஜமாஉத்- உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் முக்கியப் பொறுப்பிலும் உள்ளார். இதுகுறித்து ரஷீத் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கின் முக்கிய பிரச்னையே, கோவிலை இடித்து, மசூதி கட்டப்பட்டதா என்பது தான். அதற்கான ஆதாரம் இல்லை என, நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியிருக்கையில், முஸ்லிம்கள் தரப்புக்கே நிலத்தின் உரிமை இருப்பது உறுதியாகிறது. ஆனால், தீர்ப்பு மாறுபட்டு உள்ளது, என கூறியிருந்தார். அதேபோல், ஹிந்து மஹாசபா தாக்கல் செய்த மனுவில், அயோத்தியில் மசூதி கட்ட, சன்னி வக்பு வாரியத்துக்கு, ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றம் அதிரடிஇந்த நிலையில், இந்த சீராய்வு மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையில், நீதிபதிகள் சந்திராசூட், அசோக்பூஷண், நசீர் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அறைக்குள் ரகசியமாக நடைபெற்ற விசாரணையை அடுத்து, சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் இனி மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதே கடைசி சட்டரீதியான வழியாக உள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற வரலாற்றின் படி, மறுசீராய்வு மனுக்கள் அனைத்தும் 99% தள்ளுபடி செய்யப்படவே வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை