அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது: மோடி கருத்துக்கு காங்கிரஸ் கிண்டல்

தினகரன்  தினகரன்
அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது: மோடி கருத்துக்கு காங்கிரஸ் கிண்டல்

டெல்லி: அசாமில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவை, காங்., கட்சி கண்டித்து பதிலடி கொடுத்துள்ளது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு  மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. திப்ரூகரில் பொதுமக்கள் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கியால் ரப்பர் குண்டுகளால் சுட்டும் கூட்டத்தை கலைத்தனர். ஜோர்ஹட், கோலாகட், தின்சுகியா, சிவசாகர், நாகோன், போன்கய்கான், சோனிட்பூர் போன்ற பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சாலைகளில் டயர்கள் கொளுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதித்துள்ளது. ரயில் மறியல் காரணமாக, 14க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களின் மையப்பகுதியான கவுகாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாமின்  எனது சகோதர சகோதரிகளுக்கு குடியுரிமை மசோதா குறித்து அவர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்களின் உரிமைகள், தனிப்பட்ட அடையாளம், அழகிய கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் பறிக்க முடியாது என பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். மோடியின் இந்த டுவிட்டை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளது. அசாமில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகள் உங்கள் \'உறுதியளிக்கும்\' செய்தியை படிக்க முடியாது, மோடிஜி . நீங்கள் மறந்து விட்டீர்கள்! அவர்களின் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

மூலக்கதை