ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரிக்கும் பயங்கரவாதிகள் தாக்குதல்: நைஜர் நாட்டில் 70 ராணுவ வீரர்கள் பலி

தினகரன்  தினகரன்
ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரிக்கும் பயங்கரவாதிகள் தாக்குதல்: நைஜர் நாட்டில் 70 ராணுவ வீரர்கள் பலி

நியாமி: நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் ராணுவ வீரர்கள் 70 பேர் வீர மரணம் அடைந்தனர். ஆப்பிரிக்கா கண்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு நைஜர்.  கடந்த சில ஆண்டுகளாகவே மாலி, நைஜர், பர்கினோ பாசோ போன்ற ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளில் பயங்கரவாதிகள் நடமாட்டமும் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற போகோஹரம் பயங்கரவாத அமைப்பினர், அங்கு ஒரு மத அடிப்படையிலான அரசை அமைப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். அவர்கள் நைஜீரியாவின் அண்டை நாடான நைஜரிலும் கால் பதித்துள்ளனர். அங்கும் அவர்கள் வன்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்,  நைஜர் நாட்டின் உவால்லம் பகுதியில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 வீரர்கள் உயிரிழந்தனர். உவால்லம் பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இயக்கத்தினர் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று இரவு திடீரென இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், 70 வீரர்கள் உயிரிழந்தாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களை ஒடுக்குவதற்காக, நைஜர் ராணுவம் அண்டை நாடான மாலி ராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே பிரான்ஸ் நாடு ஆப்பிரிக்க நாடுகளில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு உதவியாக தனது ராணுவ வீரர்களை அந்நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.

மூலக்கதை