3 நாடுகளின் சிறுபான்மையினருக்கு சலுகை வழங்குவதுதான் இந்த மசோதாவின் நோக்கம்: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கருத்து

தினகரன்  தினகரன்
3 நாடுகளின் சிறுபான்மையினருக்கு சலுகை வழங்குவதுதான் இந்த மசோதாவின் நோக்கம்: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கருத்து

டெல்லி: குடியுரிமை மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள் பற்றி நன்கு அறிந்தவர்களில் ஒருவரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே குடியுரிமை மசோதா குறித்து கூறுகையில், குடியுரிமை திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என கூறினார். சிலர் கூறுவது போல அரசியலமைப்பு சட்டத்தின் 14, 15 மற்றும் 21 ஆகிய பிரிவுகள் மீறப்படவும் இல்லை.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்த சிறு பான்மையினருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதுதான் இந்த மசோதாவின் நோக்கமாகும். எனவே அதே நாடுகளில் பெரும்பான்மையினராக உள்ளவர்கள் இந்த மசோதாவின் கீழ் அடைக்கலம் கோர முடியாது. அதாவது குடியுரிமை வழங்கும் நடைமுறையில் இந்த 3 நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து குடியேறிய பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. அவர்களுக்கு இப்போது நடைமுறையில் உள்ள பொதுவான புகலிடம் கோரும் விதிகளின்படி குடியுரிமை வழங்கப்படும் அதில் இந்த மசோதா தலையிடாது. எனவே அரசியல் சாசன சட்டத்தின் 14-வது பிரிவு மீறப்படவில்லை என்று மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.அரசியல் சாசன சட்டத்தின் 15-வது பிரிவைப் பொறுத்தவரை இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே பொருத்தமாகும் மற்றும் மற்ற நாட்டினருக்கு பொருந்தாது. 21-வது பிரிவு வாழ்வதற்கான உரிமையுடன் தொடர்புடையது. வாழ்வதற்கான உரிமை என்பது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பிற நாட்டில் இருந்து இந்தியாவில் நுழைய விரும்புவோருக்கு பொருந்தாது. எனவே இந்த பிரிவுகளையும் இந்த மசோதா மீறவில்லை. இந்த மசோதாவில் முஸ்லிம்கள் விடுபட்டதன் மூலம் அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதாக அர்த்தம் இல்லை. சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக சிங்கத்துக்கும் ஆட்டுக்குட்டிக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டும் என அர்த்தம் இல்லை.குடியுரிமை மசோதாவில் குறிப்பிட்டப்பட்டுள்ள 3 நாடுகளில் அகமதியா, ஹசாரா மற்றும் ஷியா பிரிவினர் மீது பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படுகிறது. அந்த நாடுகள் முஸ்லிம் நாடுகள் என்பதாலும் அங்கு இஸ்லாமிய விதிகள் நடைமுறையில் உள்ளதாலும் இந்தப் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட நாடுகள்தான் தீர்வு காண வேண்டும். இலங்கை தமிழர்கள் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் தஞ்சமடையவில்லை. எனவே அவர்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இந்த மசோதாவில் மியான்மர் சேர்க்கப்படவில்லை என்பதால் அந்த நாட்டிலிருந்து இங்கு குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு இது பொருந்தாது. இந்த மசோதா அரசியல் அல்லது பொருளாதாரரீதியாக அடைக்கலம் கோருவோருக்கானது அல்ல என்பதால் முஸ்லிம்களுக்கும் பொருந்தாது என மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கூறினார்.

மூலக்கதை