தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த ஆண்டில் 9,811 இந்தியர்கள் கைது...அமெரிக்க குடிவரவு தணிக்கைத் துறை அறிக்கை

தினகரன்  தினகரன்
தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த ஆண்டில் 9,811 இந்தியர்கள் கைது...அமெரிக்க குடிவரவு தணிக்கைத் துறை அறிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம்  பயங்கரவாதிகளுக்கு எதிராக புதிய கொள்கை ஒன்றை கடந்த வருடம் வகுத்தது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களை ஆதரிப்போருக்கும் கடும் எச்சரிக்கை விடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கொள்கையை டிரம்ப் வெளியிட்டார்.  இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், \'பயங்கரவாத எதிர்ப்பு தேசிய கொள்கை வழிகாட்டுதலின்படி, எங்கள் பெரிய தேசத்தை பாதுகாப்பதற்கு அமெரிக்க வல்லரசின் அனைத்து கருவிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம். அந்தவகையில் அமெரிக்கா,  தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும்\' என்று தெரிவித்தார். தேசத்துக்கு எதிராக அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையும், 2011-ம் ஆண்டு முதல் நாடு மேற்கொண்டு வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை கோடிட்டு காட்டுவதாக கூறிய  டிரம்ப், அனைத்து பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்தும் அமெரிக்காவை பாதுகாக்கவும், அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கவும் இந்த கொள்கை வழிகாட்டும் என்றும் குறிப்பிட்டார்.இதற்கிடையே, அமெரிக்க பாதுப்பு தொடர்பாக அந்நாட்டு குடிவரவு தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தேசப்  பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையின்படி, கடந்த 2015-ம் ஆண்டில் 3,532 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,811 ஆக  உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவர்களில் 831 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை