பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல்: போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராக வாய்ப்பு....கருத்துக் கணிப்பில் தகவல்

தினகரன்  தினகரன்
பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல்: போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராக வாய்ப்பு....கருத்துக் கணிப்பில் தகவல்

லண்டன்: 650 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’  நடவடிக்கையை செய்து முடிப்பதில் இழுபறி ஏற்பட்டது.  அக்டோபர் 31-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கிலாந்து நாடாளுமன்றம், இதை ஒப்புக்கொள்ளவில்லை. கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கிடுக்கிப்பிடி  போட்டது.தொடர்ந்து, ஐரோப்பிய  கூட்டமைப்பு, இந்த கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க சம்மதம் தெரிவித்தது. ஆனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்தி  மக்களின் ஆதரவை பெற தீர்மானித்தார். இதையடுத்து, டிசம்பர் 12-ம் தேதி (இன்று) ‘திடீர்’ தேர்தல் நடத்துவதற்கான மசோதா, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் நாடாளுமன்ற மக்கள் சபையில் கொண்டு வந்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.  இதில் மசோதாவுக்கு ஆதரவாக 438 எம்.பி.க்களும்,  எதிராக 20 எம்.பி.க்களும் ஓட்டு போட்டனர். பெருவாரியான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதால், அது நிறைவேறியது.இதையடுத்து, அறிவித்தப்படி, 650 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெரேமி கார்பைன் தலைமையிலான தொழிலாளர்  கட்சியுமே பிரதான போட்டியாளர்களாக கருதப்படுகிறது. பிரெக்சிட் விவகாரமே இந்தத் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என கணிக்கப்பட்டாலும், இரு கட்சியின் தலைவர்களும் இதுகுறித்து தங்கள் பரப்புரையில் மவுனம் காத்தே வந்தனர்.தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின் படி போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 339 இடங்களை அந்தக் கட்சி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சிக்கு 231 இடங்கள்  கிடைக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான போரிஸ் ஜான்சானின் வெற்றிவாய்ப்பு மங்கியுள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை