குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியிருப்பது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை: அசாம் மக்களுக்கு பிரதமர் மோடி உறுதி

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியிருப்பது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை: அசாம் மக்களுக்கு பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியிருப்பது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை, என்பதை அசாம் மக்களுக்கு உறுதியளிக்க விரும்புவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுகுறுதித்து ஆங்கிலம் மற்றும் அசாமி ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ச்சியான ட்வீட்டுகளில் மோடி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதன்படி, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்பதை அசாமில் உள்ள எனது சகோதரர்கள், சகோதரிகளுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். அசாம் மக்களின் உரிமைகள், தனித்துவமான அடையாளம் மற்றும் அழகான கலாச்சாரத்தை யாரும் பறிக்க முடியாது. அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதையும் உறுதியளிக்க விரும்புகிறேன். அசாம் மக்களின் அரசியல், மொழிவாரி, பண்பாட்டு, நில உரிமைகளை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அரசியல் சட்டத்தின்படி அசாம் மக்களின் உரிமைகளை மத்திய அரசும் தானும் பாதுகாப்போம், என்று கூறியுள்ளார். முன்னதாக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு  மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. திப்ரூகரில் பொதுமக்கள் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கியால் ரப்பர் குண்டுகளால் சுட்டும் கூட்டத்தை கலைத்தனர். ஜோர்ஹட், கோலாகட், தின்சுகியா, சிவசாகர், நாகோன், போன்கய்கான், சோனிட்பூர் போன்ற பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சாலைகளில் டயர்கள் கொளுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதித்துள்ளது. ரயில் மறியல் காரணமாக, 14க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களின் மையப்பகுதியான கவுகாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி அசாம் மக்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை