வெறும் 74,000 கோடிக்கு பிபிசிஎல்-ஐ விற்பதால் 9 லட்சம் கோடி இழப்பு : வங்கி அதிகாரிகள் கொதிப்பு

தினகரன்  தினகரன்
வெறும் 74,000 கோடிக்கு பிபிசிஎல்ஐ விற்பதால் 9 லட்சம் கோடி இழப்பு : வங்கி அதிகாரிகள் கொதிப்பு

புதுடெல்லி: பாரத் பெட்ரோலியம் கார்ப்பொரேஷன் நிறுவனத்தை (பிபிசிஎல்) தனியாருக்கு விற்பதால் அரசுக்கு 9 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என வங்கி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்ப்புகளை மீறி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பதில் மத்திய அரசு படு தீவிரமாக உள்ளது. இந்த நிறுவன பங்கு  முழுவதையும் விற்று மொத்தமாக வெளிநாட்டு நிறுவன கட்டுப்பாட்டில் இயங்கச்செய்ய அந்நிய முதலீட்டு விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கு ஊழியர்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பொதுத்துறை அதிகாரிகள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 1.06 லட்சம் கோடி. இதில் மத்திய அரசுக்கு 53.29 சதவீத பங்குகள் உள்ளன. தனியார் நிறுவன கட்டுப்பாட்டுக்கான பிரீமியம் தொகை சுமார் 30 சதவீதம் சேர்த்து கணக்கிட்டால், மத்திய அரசு வசம் உள்ள பங்கு மதிப்பு சுமார் 74,000 கோடி.ஆனால், நிறுவனத்தின் வெளிச்சந்தை மதிப்பை கணக்கிட்டால், மிக மிக குறைந்த பட்சம் அரசுக்கு 4.46 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். அதேநேரத்தில், இதேபோன்ற கட்டமைப்புடன் ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்க, பிபிசிஎல் சொத்து மதிப்பை சேர்த்து கணக்கிட்டால் ₹9 லட்சம் கோடியாவது தேவைப்படும். இதை வெறும் 74,000 கோடிக்கு விற்பது எந்த வகையில் நியாயம்? என வங்கி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  அது மட்டுமின்றி, கிழக்கிந்திய கம்பெனி கொடுங்கோலாட்சி செய்து இந்தியாவின் வளங்களை கொள்ளையடித்து சென்றது போல, இப்படி ஒரு நிறுவனத்தை வெளிநாட்டவருக்கு விற்கும் மற்றொரு கிழக்கிந்திய கம்பெனி இயக்கமா இப்போது நடக்கிறது என்ற கேள்வியையும் அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.

மூலக்கதை