பொருளாதார வளர்ச்சி 5.1% தான் சாத்தியம் : ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

தினகரன்  தினகரன்
பொருளாதார வளர்ச்சி 5.1% தான் சாத்தியம் : ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை, 6.5 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாக ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்துள்ளது. இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி சென்று விட்டது. பொருளாதார வளர்ச்சி குறியீடாக கருதப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 6.1 சதவீதமாக இருக்கும் என கடந்த அக்டோபரில் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. ஆனால், இதை மேலும் குறைத்து 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் 6 ஆண்டுகளில் இல்லாத சரிவாக பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.இதை தொடர்ந்து, ஆசிய வளர்ச்சி வங்கியும், வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என, இந்த வங்கி கடந்த செப்டம்பரில் மதிப்பீடு செய்திருந்தது. ஆனால், இந்த அளவு உயர சாத்தியம் இல்லை. வளர்ச்சி 5.1 சதவீதம் மட்டுமே இருக்க முடியும் என நேற்று தெரிவித்துள்ளது. வங்கிசாரா நிதி நிறுவன வீழ்ச்சி, வேலை வாய்ப்பு இல்லாததால் வாடிக்கையாளர்களிடையே வாங்கும் திறன் குறைவு, போதுமான அளவு விளைச்சல் இல்லாதது போன்ற காரணங்களால் வளர்ச்சி குறைக்கப்பட்டுள்ளது என இந்த வங்கி கூறியுள்ளது.

மூலக்கதை