#CAB2019 நிறைவேற்றம்: அமித்ஷா எங்கள் நாட்டில் தங்கி பார்த்தால் மத நல்லிணைக்கம் தெரியும்...வங்க தேச வெளியுறவுத்துறை அமைச்சர் சாடல்

தினகரன்  தினகரன்
#CAB2019 நிறைவேற்றம்: அமித்ஷா எங்கள் நாட்டில் தங்கி பார்த்தால் மத நல்லிணைக்கம் தெரியும்...வங்க தேச வெளியுறவுத்துறை அமைச்சர் சாடல்

டாக்கா: வங்கதேசத்தில் சில மாதங்கள் அமித்ஷா தங்கி பார்த்தால் எங்கள் நாடு மத நல்லிணைக்கத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதை காண்பார் என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமென் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், புத்த  மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 9ம் தேதி வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பாஜ கட்சிக்கு  பெரும்பான்மை பலம் இருப்பதால் மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இம்மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல்  செய்து பேசியதாவது: பாகிஸ்தான், வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 20 சதவீதம் குறைந்துள்ளது. அவர்கள் ஒன்று கொல்லப்பட்டுள்ளனர் அல்லது அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர். அங்கு, சிறுபான்மையினர்களுக்கு எந்த உரிமையும் தரப்படுவதில்லை. இந்த சட்ட திருத்தத்தையும், இந்திய முஸ்லிம்களையும்  சம்பந்தப்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றார். இதைத் தொடர்ந்து மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 124 ஓட்டுகள் எதிராகவும், 99 ஓட்டுகள் ஆதரவாகவும் பதிவாகின.  இதனால், தேர்வுக்குழுவுக்கு அனுப்புவது நிராகரிக்கப்பட்டது. பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 43 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து, மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில்,  ஆதரவாக 125 ஓட்டுகளும், எதிர்த்து 105 ஓட்டுகளும் பதிவாகின. சிவசேனா கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால், மசோதா நிறைவேற்றப்பட்டது. இது, பாஜ.வுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. இதற்கு அண்டை நாடான பாகிஸ்தான் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வங்கதேசமும் தற்போது தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மேலும் வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மத ரீதியில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற  இந்தியாவின் குற்றச்சாட்டை வங்கதேசம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமென், மத சார்பின்மை மீது கொண்டுள்ள  நம்பிக்கையின் காரணமாக சகிப்புத்தன்மை கொண்ட நாடு என இந்தியாவை வரலாறு போற்றுகிறது. ஆனால் இந்த மசோதாவால் இந்தியாவின் வரலாற்று சிறப்பு வலுவிழக்கும். மத நல்லிணக்கம் சிறப்பான முறையில் கடைபிடிக்கப்படும் சில  நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வங்கதேசத்தில் வந்து சில மாதங்கள் வாழ்ந்தால், மத நல்லிணக்கத்திற்கு எங்கள் நாடு முன்னுதாரணமாக திகழ்வதை காண்பார்.இந்தியாவிற்குள் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அவர்கள் அதை சரி செய்ய போராடட்டும். எங்களை பற்றி அவர்கள் கவலை கொள்ள தேவையில்லை. நட்பு நாடு என்ற முறையில், எங்களுடனான நட்புறவை பாதிக்கும் வகையிலான எந்த  செயல்பாட்டையும் இந்தியா மேற்கொள்ளாது என நம்புகிறோம் என்றார்.

மூலக்கதை