சூடுபிடித்தது! கோர்ட் உத்தரவை அடுத்து உள்ளாட்சி தேர்தல்...மூன்றாவது நாளில் 1,800 பேர் மனு தாக்கல்

தினமலர்  தினமலர்
சூடுபிடித்தது! கோர்ட் உத்தரவை அடுத்து உள்ளாட்சி தேர்தல்...மூன்றாவது நாளில் 1,800 பேர் மனு தாக்கல்

கடலுார்:சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் மனுத்தாக்கல் செய்ய திரண்டு வந்ததால் கடலுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் களை கட்டியது.
உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கியது. கடந்த 9ம் தேதி 244 பேரும், நேற்று முன்தினம் 326 பேரும் மனு தாக்கல் செய்தனர்.பிரதான கட்சிகளான அ.தி.மு.க., - தி.மு.க., சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் ஆர்வம் காட்டவில்லை. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளான காங்., உள்ளிட்ட கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்ததால், தீர்ப்பை எதிர்பார்த்து அரசியல் கட்சிகள் மனு தாக்கல் செய்யாமல் காத்திருந்தன. இந்நிலையில் கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தல் நடத்திக்கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. நேற்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக வேட்பாளர்களுடன் கிராம மக்கள் திரண்டு வந்தனர். அதனால் கடலுார் - நெல்லிக்குப்பம் ரோட்டில் மக்கள் கூட்டம் களைகட்டியது.
இதே போல், மேல்புவனகிரி, கீரப்பாளையம், மங்களூர், கம்மாபுரம் உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய டாடா ஏஸ் மற்றும் டிராக்டர் டிப்பர்களில் தங்களது ஆதரவாளர்களுடன் ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே தி.மு.க., சார்பில் இன்று தான் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து போட்டியிடும் இடங்கள் குறித்து பேசி இறுதி செய்யப்படவுள்ளன. அதன் பின்னர்தான் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. அதேப்போல ஆளும் அ.தி.மு.க., வில் தேர்தலில் போட்டியிட யார் யாருக்கு வாய்ப்பு வழங்குவது என்பது குறித்து நேற்று கடலுாரில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
இதில் கூட்டணி கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ., கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதியானவுடன் வேட்பு மனு தாக்கல் செய்வர்.நேற்று மூன்றாவது நாளில் மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கு 2 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 24 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 524 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,250 பேர் என மொத்தம் 1800 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மூன்று நாட்களில் 2,126 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மூலக்கதை