2002ல் நடந்த கோத்ரா கலவரத்தில் மோடி அரசுக்கு தொடர்பில்லை: நானாவதி ஆணையம் அறிக்கை

தினகரன்  தினகரன்
2002ல் நடந்த கோத்ரா கலவரத்தில் மோடி அரசுக்கு தொடர்பில்லை: நானாவதி ஆணையம் அறிக்கை

காந்திநகர்: ‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பின்னர் நடந்த கலவரத்துக்கும், அப்போதைய முதல்வர் மோடி தலைமையிலான அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை,’ என நானாவதி ஆணையம்  தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த கரசேவர்கள் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது 2 பெட்டிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதில், கரசேவகர்கள் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது. இதில், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இந்த கலவரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக, அப்போது இம்மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி அரசு, ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. பின்னர், இந்த ஆணையம் மாற்றி அமைக்கப்பட்டது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி நானாவதி தலைமையிலான இந்த ஆணையஆணையம் தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்பித்தது. இந்நிலையில், நானாவதி ஆணையத்தின் அறிக்கையை உள்துறை அமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆணையம் முழுமையாக ஆய்வு செய்ததில் கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து நடந்த இனகலவரமானது, சம்பவத்தை தொடர்ந்து நடந்த நிகழ்வுதான். எந்த மதம் அல்லது அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகளுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதாக எந்த ஆதாரமும் கிடையாது. இது முன்திட்டமிடப்பட்ட சதி அல்லது திட்டமிட்ட வன்முறை சம்பவம் கிடையாது. இந்த சம்பவத்துக்கும் அப்போது இருந்த முன்னாள் முதல்வர் மோடி தலைமையிலான மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை