அமெரிக்கா அருகில் உள்ள தீவில் நித்யானந்தா ‘உய்யலாலா’: கைது செய்ய போலீசார் தீவிரம்

தினகரன்  தினகரன்
அமெரிக்கா அருகில் உள்ள தீவில் நித்யானந்தா ‘உய்யலாலா’: கைது செய்ய போலீசார் தீவிரம்

புதுடெல்லி: உலகம் முழுவதும் இப்போது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் நபராக நித்தியானந்தா மாறியுள்ளார். அவர் ஈகுவெடார் நாட்டில் உள்ள தீவை வாங்கி, ‘கைலாசா’ என்ற பெயரில் தனி நாடு உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 12 லட்சம் பேர் கைலாசா நாட்டிற்கு வர விண்ணப்பித்துள்ளனர் என்றும் நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தனிநாடு தகவலை ஈகுவெடார் மறுத்துள்ளது. இதுகுறித்து ஈகுவெடார் நாட்டு அரசு கூறியுள்ளதாவது:நித்யானந்தா 2018ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி முதல் முறையாக ஈகுவடார் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வந்தார். அவர் எங்கள் நாட்டின் துறைமுக நகரான குயாக்குல் அருகே தங்கியிருந்தார். இந்நிலையில், சர்வதேச பாதுகாப்பு கேட்டும், அகதியாக ஏற்றுக் கொள்ளமாறும் எங்களிடம் விண்ணப்பித்தார். அவரது மனுவை பரிசீலிக்கவும் வரை, அதாவது அக்டோபர் 19ம் தேதி வரை தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், திடீரென அவர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனால் 2019ம் ஆண்டு ஆகஸ்டில் அவர் ஈகுவெடாரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்போது, அவர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் அடுத்த செல்ல உள்ள இடம், கரீபியன் கடல் அருகே ஹைதி என்ற தீவு என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஈகுவெடார் அரசு கூறியுள்ளது. இந்நிலையில், நித்யானந்தா யூடியூப் வீடியோ மூலம் அவரது கம்ப்யூட்டர் முகவரியான ஐ.பி. அட்ரசை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அவர், பனாமா கால்வாய்க்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கும் இடையே ஏதோ ஒரு தீவில் இருக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வரும் குஜராத் போலீசார், அவரை கைது செய்வதில் தீவிரமாக உள்ளனர்.\'‘நானே அவன்’  அடுத்த வீடியோ வெளியீடு\'நித்தியானந்தா புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: எனது சீடர்கள் என்னை நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தை சுற்றி வருகிறார்கள். உண்மையான கைலாசத்தை நான் உருவாக்குகிறேன். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார். கைலாசா என்பது எல்லைகள் அற்ற ஆன்மிக பெருவெளி. கைலாசா மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம். அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. என் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள். நானே மனிதத்தின் எதிர்காலம். இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

மூலக்கதை