கடந்த ஓராண்டில் 20 அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை உயர்வு: ஒப்புக் கொண்டது மத்திய அரசு

தினகரன்  தினகரன்
கடந்த ஓராண்டில் 20 அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை உயர்வு: ஒப்புக் கொண்டது மத்திய அரசு

புதுடெல்லி: கடந்த ஓராண்டில் வெங்காயம் உள்ளிட்ட 20 அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மக்களவையில் நேற்று மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பதிலளித்து பேசியதாவது: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 22 அத்தியாவசிய உணவுப் பொருள்களில், 20 உணவுப் பொருள்களின் விலை கடந்த ஓராண்டில் படிப்படியாக உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தேவை, வானிலை மற்றும் பருவநிலை காரணமாக உற்பத்தி பற்றாக்குறை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, பதுக்கல், கருப்பு சந்தை போன்றவற்றால் உருவாக்கப்பட்ட செயற்கை பற்றாக்குறையால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வெங்காயம் மட்டுமின்றி அரிசி, கோதுமை, கடலை, உளுந்து மற்றும் பாசிப் பருப்பு, எண்ணெய், தேயிலை, சர்க்கரை, பால், உருளைக் கிழங்கு, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை கடந்த மார்ச் மாதத்துக்கு பின்னர் 400 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த விலை உயர்வு 15ல் இருந்து 20 சதவீதமும், நல்ல விளைச்சல் இருந்தும் அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலை 10 சதவீதமும், உருளைக் கிழங்கு விலை 40 சதவீதமும் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தின் கீழ் உணவுப் பொருள்களின் பற்றாக்குறை, விலை நிர்ணயம், போக்குவரத்து ஆகியவற்றை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு கூறினார்.

மூலக்கதை