கோப்பை வென்றது இந்தியா: ரோகித், ராகுல், கோஹ்லி விளாசல் | டிசம்பர் 11, 2019

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது இந்தியா: ரோகித், ராகுல், கோஹ்லி விளாசல் | டிசம்பர் 11, 2019

மும்பை: விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘டுவென்டி–20’ தொடரை 2–1 என கைப்பற்றியது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கோஹ்லி அரைசதம் விளாசினர். 

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் மோதியது. முதல் இரு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமனில் இருந்தது. 

இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஜடேஜா, சகால் நீக்கப்பட்டு முகமது ஷமி, குல்தீப் சேர்க்கப்பட்டனர்.

மின்னல் துவக்கம்

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி மின்னல் வேக துவக்கம் கொடுத்தது. காட்ரெல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கிய ரோகித், அடுத்து சிக்சர், பவுண்டரி என விளாசினார். மறுபக்கம் ராகுல், தன் பங்கிற்கு ஹோல்டர் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடிக்க, முதல் 6 ஓவரில் இந்திய அணி 72 ரன்கள் குவித்தது. 

இரண்டு அரைசதம்

ரோகித், சர்வதேச ‘டுவென்டி–20’ல் 19வது அரைசதம் எட்டினார். லோகேஷ் ராகுல் இத்தொடரில் இரண்டாவது முறையாக அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்த போது ரோகித் சர்மா (71) அவுட்டானார். ரிஷாப் பன்ட், இம்முறையும் கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு ‘டக்’ அவுட்டானார். 

கோஹ்லி அபாரம்

ராகுலுடன் இணைந்தார் கோஹ்லி. இந்திய அணி 17.4 ஓவரில் 200 ரன்களை கடந்தது. கோஹ்லி, 24வது அரைசதம் எட்டினார். போலார்டு வீசிய 19வது ஓவரில் மட்டும் இந்தியா 27 ரன்கள் எடுத்தது. ராகுல் (91) சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து திரும்பினார். இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது. கோஹ்லி (70), ஸ்ரேயாஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

புவனேஷ்வர் நம்பிக்கை

விண்டீஸ் அணிக்கு சிம்மன்ஸ், பிரண்டன் கிங் ஜோடி துவக்கம் கொடுத்தது. தீபக் சகார் பந்தில் பவுண்டரி அடித்த கிங்கை (8), புவனேஷ்வர் வெளியேற்றினார். மறுபக்கம் சிம்மன்சை (7) திருப்பி அனுப்பினார் முகமது ஷமி. அடுத்து வந்த பூரன் (0), ஒரே பந்தில் திரும்பினார். 

ஹெட்மயர் 41 ரன் எடுத்தார். 33வது பந்தில் அரைசதம் எட்டிய போலார்டு, 68 ரன்னுக்கு அவுட்டாக, இந்தியா வெற்றி உறுதியானது. வால்ஷ் 11 ரன்கள் எடுத்தார். பியர்ரே (6) கைவிட்டார். விண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டும் எடுத்தது. வில்லியம்ஸ் (13), காட்ரெல் (4) அவுட்டாகாமல் இருந்தனர். 67 ரன்னில் வெற்றி பெற்ற இந்தியா ‘டுவென்டி–20’ தொடரை 2–1 என கைப்பற்றியது.

 

183

‘டுவென்டி–20’ தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்கள் இந்தியாவின் கோஹ்லி (183) முதலிடம் பிடித்து, தொடர் நாயகன் ஆனார். இந்தியாவின் ராகுல் (164), விண்டீசின் ஹெட்மயர் (120) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

 

4

இரு அணிகள் மோதிய ‘டுவென்டி–20’ தொடரில், இந்தியா நேற்று நான்காவது முறையாக (2011, 2018, 2019ல் 2) கோப்பை வென்றது. விண்டீஸ் அணி இரு முறை (2016, 2017) வென்றது.

 

100

நேற்று 70 ரன்கள் எடுத்த கோஹ்லி, சர்வதேச அரங்கில் மூன்று வித கிரிக்கெட்டில் 100வது அரைசதம் அடித்தார். இவர் டெஸ்டில் 22, ஒருநாள் அரங்கில் 54, ‘டுவென்டி–20’ல் 24 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

* இதில் கேப்டனாக 39 அரைசதம், சொந்தமண்ணில் 39 அரைசதம் விளாசினார்.

 

‘டுவென்டி–20’ல் இந்திய அணியில் இரண்டு துவக்க வீரர்களும் அரைசதம் எட்டியது 5வது முறையாக நேற்று நடந்தது. ரோகித் 71, ராகுல் 91 ரன்கள் எடுத்தனர். 

 

22

இந்தியாவின் ரோகித், ராகுல் ஜோடி நேற்று முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. சர்வதேச ‘டுவென்டி–20’ ல் இந்திய ஜோடி எடுத்த 22 வது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆக இது அமைந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா (22) முதலிடத்தில் உள்ளன. இங்கிலாந்து (16 முறை), பாகிஸ்தான் (16) அணிகள் அடுத்து உள்ளன. 

 

1000

நேற்று கோஹ்லி 6 ரன் எடுத்த போது சொந்தமண்ணில் நடந்த சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர் ஆனார். 

சர்வதேச அளவில் நியூசிலாந்தின் கப்டில் (1,430), மன்ரோ (1000) சொந்தமண்ணில் இந்த மைல்கல்லை எட்டினர்.

 

2,633

சர்வதேச ‘டுவென்டி–20’ல் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் கோஹ்லி (75 போட்டி, 2,633 ரன்) ரோகித் சர்மா (104 போட்டி, 2,633 ரன்) முதலிடத்தில் உள்ளனர். தோனி (1,617) மூன்றாவதாக உள்ளார்.

 

லீவிஸ் காயம்

இந்திய வீரர் ராகுல் அடித்த பந்தை (11.1 வது ஓவர்), பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த எவின் லீவிஸ் வலது முழங்காலில் காயம் அடைந்தார். ‘ஸ்டிரெச்சர்’ உதவியால் லீவிஸ் வெளியேறினார்.

 

முதன் முறை

சர்வதேச ‘டுவென்டி–20’ ல் (மொத்தம் 1024 போட்டி) ஒரு அணியின் மூன்று வீரர்கள் 70 மற்றும் அதற்கும் மேல் ரன் எடுத்தது நேற்று தான் முதன் முறையாக நடந்தது. இந்தியாவின் ரோகித் 71, ராகுல் 91, கோஹ்லி 70 ரன்கள் எடுத்தனர். 

 

‘டுவென்டி–20’ தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்கள் இந்தியாவின் கோஹ்லி (183) முதலிடம் பிடித்தார். இந்தியாவின் ராகுல் (164), விண்டீசின் ஹெட்மயர் (120) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

மூலக்கதை