400 சிக்சர் விளாசினார் ரோகித் | டிசம்பர் 11, 2019

தினமலர்  தினமலர்
400 சிக்சர் விளாசினார் ரோகித் | டிசம்பர் 11, 2019

மும்பை: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 400 சிக்சர் அடித்த முதல் இந்தியர் ஆனார் ரோகித் சர்மா.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் மோதியது. முதல் இரு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமனில் இருந்து. 

இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு, பீல்டிங் தேர்வு செய்தார். 

இந்திய அணியில் ஜடேஜா, சகால் நீக்கப்பட்டு முகமது ஷமி, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இடம் கிடைக்கவில்லை. 

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. காட்ரெல் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தை, ரோகித் சிக்சருக்கு அனுப்பினார். இது இவர் அடித்த 400வது சிக்சராக இது அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் ஆனார். தோனி (359) அடுத்த இடத்தில் உள்ளார்.

* சர்வதேச அளவில் 400 சிக்சர் அடித்த மூன்றாவது வீரர் ஆனார் ரோகித் (மொத்தம் 404). முதல் இரு இடங்களில் விண்டீஸ் வீரர் கெய்ல் (534), பாகிஸ்தானின் அப்ரிதி (476) உள்ளனர். 

* இந்த இலக்கை குறைந்த இன்னிங்சில் (354) எடுத்த முதல் வீரர் ரோகித் தான். அப்ரிதி (508), கெய்ல் (530) அடுத்து உள்ளனர். 

* சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் ரோகித் (116) முதலிடத்தில் தொடர்கிறார். நியூசிலாந்தின் கப்டில் (113), விண்டீசின் கெய்ல் (105) அடுத்த இரு இடங்களில் உள்ளனர். 

 

யார் யார்

இந்திய கிரிக்கெட்டில் 100வது சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற பெருமை கபில்தேவுக்கு கிடைத்தது. 200 சிக்சர் அடித்த முதல் வீரர் ஆனார் கங்குலி. இதேபோல, 300வது சிக்சர் அடித்த முதல் இந்தியர் ஆனார் தோனி. தற்போது ரோகித், 400வது சிக்சர் அடித்துள்ளார். 

 

234

சர்வதேச ‘டுவென்டி–20’ ல் அதிக பவுண்டரி அடித்த வீரர்களில் பால் ஸ்டெர்லிங்கை (233, அயர்லாந்து) முந்தி, இரண்டாவது இடம் பெற்றார் ரோகித். இவர் 96 இன்னிங்சில் 234 பவுண்டரி அடித்துள்ளார். இந்தியாவின் கோஹ்லி (247, 69 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார்.

 

மூலக்கதை