புழல் 22-வது வார்டில் சர்வீஸ் சாலையில் மீன் கழிவுகள் தேக்கம்: அகற்றுவதில் அலட்சியம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புழல் 22வது வார்டில் சர்வீஸ் சாலையில் மீன் கழிவுகள் தேக்கம்: அகற்றுவதில் அலட்சியம்

புழல்: புழல் 22-வது வார்டில் பாதாள சாக்கடை பணி துவங்காததால், தனியார் மீன் மார்க்கெட்டில் குவியும் கழிவுகள் மற்றும் கழிவுநீர் சாலை, தெருக்கள் மற்றும் வீடுகளின் முன் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. இவற்றை அகற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.

சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 22-வது வார்டு பகுதிகளான காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், திருமலை நகர், கன்னடபாளையம், சக்திவேல் நகர், மகாவிர் கார்டன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் இன்றுவரை பாதாள சாக்கடை பணிகள் துவக்கப்படவில்லை.

இதனால் அங்குள்ள கடைகள், வீடுகள் மற்றும் சிறு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.

குறிப்பாக, காவாங்கரையில் உள்ள தனியார் மீன் மார்க்கெட்டில் கால்வாய் வசதி இல்லை. அங்கிருந்து வெளியேற்றப்படும் மீன் கழிவுகள் மற்றும் கழிவுநீர் ஜிஎன்டி சாலையின் சர்வீஸ் சாலையில் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.

அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது கழிவுநீர் பீய்ச்சியடிக்கப்படுவதால் பலர் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த கழிவுநீர் இதுவரை அகற்றப்படாமல் தேங்கியுள்ளதால், இப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயநிலை நீடித்து வருகிறது.



தனியார் மீன் மார்க்கெட் நிர்வாகத்தினரும் மண்டல, வார்டு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அந்த கழிவுநீரை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, புழல் வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்றவும், தனியார் மீன் மார்க்கெட்டினால் ஜிஎன்டி சர்வீஸ் சாலையில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை