குடியுரிமை மசோதாவை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடியுரிமை மசோதாவை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

தண்டையார்பேட்டை: இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி துணை தலைவர் தெஹ்லான் பாகவி கலந்து கொண்டார்.

இதில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்தும், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு எதிராகவும் 100-க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதன்பின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை தீயிட்டு கொளுத்தினர்.

அவர்களை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர்.

நேற்றிரவு விடுதலை செய்தனர். இதுகுறித்து தெஹ்லான் பாகவி கூறுகையில், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அதிமுக அரசு ஆதரித்திருப்பது தமிழகத்துக்கு கிடைத்த அவமானம்.

சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய பாஜ அரசு கொண்டு வரும் மசோதாக்களை அதிமுக அரசு கண்மூடித்தனமாக ஆதரித்து, மத்திய ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்டது என்றார்.

இதேபோல் பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் அன்சாரி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
அவர்களை போலீசார் கைது செய்து, நேற்றிரவு விடுதலை செய்தனர்.

.

மூலக்கதை