திருமுல்லைவாயலில் முட்புதர்கள் சூழ்ந்த சுடுகாட்டு பாதை: சடலம் எரிப்பதில் சிக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருமுல்லைவாயலில் முட்புதர்கள் சூழ்ந்த சுடுகாட்டு பாதை: சடலம் எரிப்பதில் சிக்கல்

ஆவடி: திருமுல்லைவாயல், சரஸ்வதி நகரில் உள்ள சுடுகாடு முறையான பராமரிப்பின்றி முட்புதர்கள் சூழ்ந்து, பாதைகளே இல்லாத அளவுக்கு உருமாறியுள்ளது. இதனால் அங்கு குடிநீர், மின் தகனமேடை இன்றி சடலங்களை எரிப்பதில் மக்களுக்கு சிக்கல் நீடிக்கிறது.

ஆவடி மாநகராட்சி, 8-வது வார்டான திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர் பிரதான சாலையில் ஒரு சுடுகாடு உள்ளது.   இந்த சுடுகாட்டை அனுமன் நகர், ஆர்த்தி நகர், முருகப்பா காலனி, சரஸ்வதி நகர், லட்சுமி நகர், தென்றல் நகர் கிழக்கு, மேற்கு, வடக்கு முல்லை நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதி மக்கள் பிணங்களை புதைக்கவும், எரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு நீண்ட காலத்துக்கு முன் சுடுகாடு உருவாக்கப்பட்டது. நாளடைவில் இந்த சுடுகாடு முறையான பராமரிப்பின்றி, தற்போது முட்புதர்கள் நிரம்பிய பகுதியாக உருமாறியுள்ளது.

இங்கு பிணங்களை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் தேவையான குடிநீர், சாலை வசதி மற்றும் மின்தகன மேடைகள் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு சடலங்களை எரிக்கவும், புதைக்கவும் முடியாமல் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் இங்கு சடலங்களை எரிக்க வரும்போது, கூடவே குடங்களில் நீரையும் சுமந்து வருகின்றனர். இங்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.

எனினும், அதற்கான மின் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை.

இதனால் அந்த மின்விளக்குகள் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன.

மேலும், இங்கு பல ஆண்டுகளுக்கு முன் ₹5 லட்சத்தில் காரிய மேடை அமைக்கப்பட்டும் இன்றுவரை பயன்பாட்டுக்கு வராமல் பாழடைந்துள்ளது. இந்த சுடுகாடு முழுவதும் முட்புதர்கள் வளர்ந்துள்ளதால், அங்குள்ள மண்பாதையும் மறைந்துவிட்டது.

இதனால் முட்புதர்களுக்கு இடையே சடலங்களை எடுத்து செல்லும்போது, அங்குள்ள பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷ பூச்சிகள் கடித்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்போதைய ஆவடி நகராட்சி மற்றும் தற்போதைய மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும்,

இந்த சுடுகாட்டை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே, சரஸ்வதி நகர் பிரதான சாலையில் உள்ள சுடுகாட்டில் குடிநீர், மின்வசதி, எரிவாயு தகனமேடையுடன் விரைவில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை