எஸ்எஸ்என் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
எஸ்எஸ்என் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நம்மாழ்வார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் தங்கதுரை (45).

இவர், அப்பகுதியில் வேளாண் விதைபொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் கிஷோர் (18).

கடந்த மே மாதம் சென்னை அருகே திருப்போரூரில் உள்ள சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் உள்ள எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங்கில் கிஷோர் முதலாமாண்டு படிப்பில் சேர்ந்துள்ளார். மேலும், இக்கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் வேறு பிரிவில் படிக்கும் 2 மாணவர்களுடன் கிஷோர் தங்கியிருந்தார்.

கடந்த 6-ம் தேதி கிஷோருடன் தங்கியிருந்த 2 மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு 7 மணியளவில் கோவில்பட்டியில் இருந்து அவரது சகோதரர் பிரசாந்த், கிஷோருக்கு போன் செய்தார்.

அவரது அழைப்பை கிஷோர் எடுக்காததால், விடுதியில் தங்கியிருந்த தனது ஊரை சேர்ந்த 2 நண்பர்களுக்கு பிரசாந்த் போன் செய்து விசாரித்தார். இதையடுத்து, அந்த மாணவர் கிஷோரின் அறைக்கு சென்று பார்த்தார்.

கிஷோரின் அறை உள்பக்கமாக பூட்டியிருந்ததால் சந்தேகத்துடன் விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தார். இரவு 11. 30 மணியளவில் கிஷோரின் அறைக்கதவை உடைத்து விடுதி வார்டன் மற்றும் மாணவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு அறையில் இருந்த ஜன்னலில் டவலால் தூக்கிட்ட நிலையில் கிஷோர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கிஷோரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ ராஜா, பெருமாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிஷோரின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இப்புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதலாம் ஆண்டு மாணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை