தெலுங்கானாவில் 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தெலுங்கானாவில் 4 பேர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: தெலுங்கானா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளின் என்கவுன்டர் விவகாரத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விசாரிப்பார் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 27ம் தேதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் கடந்த 6ம் தேதி அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என போலீஸார் செய்து காட்டச் சொன்னார்கள். அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, 4 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை தெலங்கானா அரசு அமைத்தது. இந்த நிலையி்ல், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகள் பின்பற்றவில்லை எனக்கூறி வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் சில தினம் முன்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். என்கவுன்டர் செய்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதில் அவர்கள் கோரியிருந்தனர். மேலும் சிறப்புக் குழுவின் விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், இன்று விசாரணை நடத்தியது. அப்போது. அப்போது 4 பேர் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நியமிக்கப்படுவார் என்றும் அவர் டெல்லியில் இருந்தபடியே விசாரணை நடத்துவார் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்கவுன்டர் விவகாரத்தில் ஏற்கனவே தெலுங்கானா உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மூலக்கதை