வறுமை ஒழிப்புக்கு முன்னோடி திட்டங்களை வகுத்த அபிஜித், எஸ்தர் தம்பதிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது: இந்திய பாரம்பரிய உடையணிந்து வந்து கலக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வறுமை ஒழிப்புக்கு முன்னோடி திட்டங்களை வகுத்த அபிஜித், எஸ்தர் தம்பதிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது: இந்திய பாரம்பரிய உடையணிந்து வந்து கலக்கல்

ஸ்டாக்ஹோம்: வறுமை ஒழிப்புக்கான முன்னோடி திட்டங்களை வகுத்த இந்திய வம்சாவளி அபிஜித் மற்றும் எஸ்தர் தம்பதிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர்கள், இந்திய பாரம்பரிய உடையணிந்து வந்து, விழாவை சிறப்பித்தனர்.


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர் அபிஜித் பானர்ஜி (58). இவரது தந்தையும், தாயும் கல்லூரி விரிவுரையாளர்கள் என்பதால் இயல்பிலேயே படிப்பில் கவனம் செலுத்திவந்துள்ளார்.

தந்தை தீபக்கை போலவே பொருளாதாரத்தை  தேர்வு செய்து கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், நேரு யுனிவர்சிட்டியில் முதுகலைப் பட்டமேற்படிப்பையும் முடித்தார். பின்னர் 1988ல் பி. ஹெச்டி படிப்பதற்காக அமெரிக்கா சென்றவர்  அங்கேயே குடியுரிமை பெற்று தங்கிவிட்டார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்  பி. ஹெச்டி முடித்த இவர், தற்போது மாசேசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில்  சர்வதேச பொருளாதார பேராசிரியராக உள்ளார்.

வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார ஆய்வில் ெதாடர்ந்து கவனம் செலுத்தி வரும் அபிஜித், ஏற்கெனவே இன்போசிஸ் விருது, ஜெரால்ட் லோப் விருது, கீல்  நிறுவனத்திடமிருந்து பெர்ன்ஹார்ட்-ஹார்ம்ஸ் விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2003ம் ஆண்டே தனது சோதனைகளுக்காக தனது மனைவி எஸ்தர் ட்யூப்லோ(46) மற்றும் செந்தில் முல்லைநாதனுடன் இணைந்து அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு மையத்தை  நிறுவியுள்ளார்.

எஸ்தர் ட்யூப்லோவும் அபிஜித்தை போல அமெரிக்கக் குடியுரிமை  பெற்ற பிரெஞ்சு பெண். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல்,  இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.



அதில், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் க்ரிமர் உடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித்  பானர்ஜி மற்றும் அவரின் மனைவி எஸ்தர் ட்யூப்லோ ஆகியோருக்கு வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்காக பொருளாதாரத்துக்கான நோபல்  பரிசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்றிரவு ஸ்டாக்ஹோமில் நடந்த நோபல் பரிசு வழங்கும் விழாவில், அபிஜித் பானர்ஜி மற்றும் அவரின் மனைவி எஸ்தர் ட்யூப்லோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

அபிஜித் வேட்டி அணிந்தும், எஸ்தர் சேலை அணிந்தும் இந்திய பாரம்பரிய உடையில் பரிசுகளை பெற்றுக் கொண்டனர். இதனை, மேற்கத்திய ஊடகங்கள் வெகுவாக பாராட்டி உள்ளன.


.

மூலக்கதை