மாநிலங்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற எங்கள் சந்தேகங்களை மத்திய அரசு தீர்க்க வேண்டும்: சிவசேனா கேள்வி

தினகரன்  தினகரன்
மாநிலங்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற எங்கள் சந்தேகங்களை மத்திய அரசு தீர்க்க வேண்டும்: சிவசேனா கேள்வி

டெல்லி: குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு நாங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றால் முதலில் எங்கள் சந்தேகங்களை மத்திய அரசு தீர்த்து வைக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்து வைத்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியுள்ள போதிலும், மாநிலங்களவையில் நிறைவேறுமா என்ற கேள்வி எழுப்பியுள்ளது. 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 238 எம்.பிக்கள் உள்ளனர். இதில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 120 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 102 எம்.பி.க்கள ஆதரவு இருக்கிறது. இதில் பாஜகவுக்கு 81 எம்.பி.க்களும், ஐக்கிய ஜனதா தளம் 6, சிரோன்மணி அகாலிதளம் 3 உறுப்பினர்கள், இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு எம்.பி. நியமன எம்.பி.க்கள் என 102 பேர் ஆதரவு இருக்கிறது. இன்னும் 18 எம்.பி.க்கள் ஆதரவு பாஜகவுக்கு தேவை என்கிற சூழ்நிலையில் உள்ளது.மக்களவையில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது, திடீர் திருப்பமாக சிவசேனா இந்த மசோதாவுக்கு ஆதரவளித்தது. மகராஷ்டிராவில் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வரும் சிவசேனா இந்த மசோதாவுக்கு ஆதரவளித்ததால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது. மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிபந்தனை விதித்துள்ளார். பாஜக கொண்டு வந்த மசோதாவுக்கு ஆதரவளித்ததால் காங்கிரஸ் தலைவர்கள் சிவசேனா மீது கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், அதனால் இந்த முடிவை உத்தவ் தாக்கரே எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்தநிலையில் குடியுரிமை மசோதா பற்றி சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், குடியுரிமை மசோதா தொடர்பாக எங்களுடைய சந்தேகங்களை மத்திய அரசு தீர்த்து வைக்க வேண்டும். எங்களுக்கு விளக்கங்கள் திருப்தி அளிக்கவில்லை என்றால், மக்களவையில் எடுத்த முடிவில் இருந்து மாறுபடுவோம். மாநிலங்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிப்போம் என கூறினார். இந்த விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியல் செய்வது சரியானது அல்ல. இந்து - முஸ்லீம் பிரிவினையை மீண்டும் உருவாக்க முயற்சிக்க கூடாது. இந்த மசோதாவில் இலங்கை தமிழ் இந்து அகதிகளுக்கு சாதகமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என சஞ்சய் ராவத் கூறினார்.

மூலக்கதை