திருப்பதியில் சுவாமி தரிசனம்: ரீசாட்-2பிஆர்1 செயற்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

தினகரன்  தினகரன்
திருப்பதியில் சுவாமி தரிசனம்: ரீசாட்2பிஆர்1 செயற்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

திருமலை: திருப்பதியில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன், ரீசாட்-2பிஆர்1 செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி தீர்த்த  பிரசாதங்களை  வழங்கி, வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தார்.பின்னர் கோயிலுக்கு வெளியே இஸ்ரோ தலைவர் சிவன் நிருபர்களிடம் கூறியதாவது:  இஸ்ரோ பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இந்த செயற்கை கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் நாளை (இன்று) மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் தொடங்கியது.  இது இஸ்ரோவின் பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50வது திட்டமாகும். இந்த ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து பணிகளும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை