காரசார விவாதங்களுக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றம்: நாளை பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்

தினகரன்  தினகரன்
காரசார விவாதங்களுக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றம்: நாளை பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்

புதுடெல்லி: மக்களவையில் நேற்றிரவு கடுமையான விவாதத்துக்கு பின்னர், குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: கடந்த 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின்படி, அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள்,  சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவை, மக்களவை தேர்தலுக்கு முன் கடந்த  ஜனவரி மாதம், பாஜ அரசு மக்களவையில் நிறைவேற்றியது. எனினும், மாநிலங்களவையில் பலம் குறைந்து இருந்ததால் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16வது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இதன்படி, மேற்கண்ட  விதிமுறைகளின்படி குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்  குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி, தேசியவாத  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மக்களவையில் நிறைவேற்றம்: இந்நிலையில், நேற்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்து, மசோதாவில் கூறப்பட்ட அம்சங்கள் குறித்து, எம்பிக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனால், காரசாரமான விவாதங்களும்,  எதிர்ப்புக் குரல்களும் எழுந்ததால் மக்களவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. பின்னர், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை தாக்கல் செய்வது தொடர்பாக வாக்கெடுப்பு  நடத்தப்பட்டது. அதில், அரசுக்கு ஆதரவாக 293 எம்பிக்களும், எதிராக 82 எம்பிக்களும் வாக்களித்தனர்.இதையடுத்து, மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்தார். மசோதாவுக்கு அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. விவாதம் இரவு 12 மணி வரை நீடித்தது. தொடர்ந்து  நள்ளிரவு 12.05 மணிக்கு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது.  நாளை மாநிலங்களவையில் தாக்கல்:இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாளை பிற்பகல் 2 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் தாக்கல் செய்கிறார். கடந்த முறை மசோதா மாநிலங்களவையில் தாக்கல்  செய்யப்பட்டபோது, மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு பலம் இல்லாத காரணத்தினால் நிறைவேற்றப்பட முடியவில்லை. இருப்பினும், இந்த முறை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக  அனைத்து பாஜக எம்.பி-களும் நாளை கட்டாயமாக மாநிலங்களையில் பங்கேற்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சிவசேனா பல்டி: மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்துவதா? வேண்டாமா? என்பது குறித்த வாக்கெடுப்பில் அதிமுக, சிவசேனா உள்ளிட்ட 293 எம்.பி.க்கள் ஆதரவாகவும், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 83 எம்.பி.க்கள் எதிராகவும்  வாக்களித்தனர். பின்னர், மக்களவையில் மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு மகாராஷ்டிராவில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவின் 17 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், குடியுரிமை சட்டத்  திருத்த மசோதவை எதிர்ப்பவர்களை தேசத் துரோகிகள் என கூறுவதா என்று சிவசேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மசோதாவில் மாற்றங்கள் செய்யாவிடில் ஆதரவு அளிக்க முடியாது என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த மசோதாவை கண்டு நாட்டின் ஏதேனும் ஒரு குடிமகன் அச்சம் கொண்டாலும் அவர்களின்  சந்தேகங்களை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். அவர்கள் நம்முடைய குடிமக்கள். அவர்களின் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் சில திருத்தங்களை கோரியுள்ளோம். அதனை மாநிலங்களவையில் எதிர்கொள்வோம்.  பாஜகவுக்கு மட்டுமே நாட்டின் மீது அக்கறை இருக்கிறது என்பது மாயையே என்றார்.

மூலக்கதை