வீடுகளில் மூலை, முடுக்கெல்லாம்... 'கவனம் வேண்டும்!'பூச்சியியல் வல்லுனர் அறிவுறுத்தல்

தினமலர்  தினமலர்
வீடுகளில் மூலை, முடுக்கெல்லாம்... கவனம் வேண்டும்!பூச்சியியல் வல்லுனர் அறிவுறுத்தல்

அவிநாசி:அவிநாசி, நகர மற்றும் ஊரகப்பகுதிகளில், காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், சென்னையில் இருந்து வந்திருந்த பூச்சியியல் வல்லுநர் குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில், சமீபநாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக, அவிநாசி, பல்லடம் வட்டாரங்களில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகம்.
அவிநாசி, கணியாம்பூண்டியில், சமீபத்தில், ஒரே வீட்டில், 2 சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.இதற்கிடையில், நேற்று, சென்னையில் இருந்து, மூத்த பூச்சியியல் வல்லுனர், கோவை மண்டல பூச்சியியல் வல்லுனர் குழுவினர், அவிநாசி பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர்.அவிநாசி, சேவூர் ரோடு, சூளையில், குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வரும் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில், சுகாதார நிலை குறித்து பார்வையிட்டனர்.
'குடியிருப்புகளின் வெளிப்புறம் மட்டுமன்றி, ஒவ்வொரு வீடுகளிலுன் மூளை, முடுக்கெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்; வீடுகளில், தண்ணீரை மூடி வைத்துள்ளனரா, சாக்கடை மற்றும் வீடுகளின் மொட்டை மாடியில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா என்பது போன்றவற்றை கள ஆய்வு செய்து, அவ்வாறு இருப்பின், அதை சரி செய்ய, வீடுகளின் உரிமையாளர்களை அறிவுறுத்த வேண்டும்.
வீடுகளில் உள்ள ஏர்கூலர், பிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற உபகரணங்கள் சுத்தமாக உள்ளதா, அவற்றில் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்திக்கு காரணமாகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வீடுகளில், பானை மற்றும் குடங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பார்வையிட்டு, அவற்றில் கொசுப்புழு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
அனுமதிக்க தயக்கம்களப்பணியில் ஈடுபடும், துப்புரவு ஊழியர்கள் சிலர் கூறியதாவது;வீடுகளுக்குள் சென்று, சுகாதார நிலை குறித்து பார்வையிட, பலர் அனுமதிப்பதில்லை. இதனால், வீடுகளை சுற்றி மட்டும் பார்வையிட்டு, கொசு மருந்து அடித்துவிட்டு வந்து விடுகிறோம்.
பலரது வீடுகள் வெளிப்புறம் பார்வைக்கு சுத்தமாக இருப்பது போல் தெரிந்தாலும், குளியலறை, சமையலறை, சாக்கடை சுத்தமாக இல்லை. இதை கண்டறிந்து சுத்தம் செய்வதற்கு அவர்கள் எங்களை அனுமதிப்பதில்லை. மாறாக, அவர்களும் சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை