இடநெருக்கடியால் நீதிமன்ற வளாகம் மூச்சு திணறுகிறது! குதிரை வண்டி கோர்ட்டுக்கு மாறுமா?

தினமலர்  தினமலர்
இடநெருக்கடியால் நீதிமன்ற வளாகம் மூச்சு திணறுகிறது! குதிரை வண்டி கோர்ட்டுக்கு மாறுமா?

கோவை:கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இட நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண, குதிரை வண்டி கோர்ட்டில், புதிய கட்டடடம் கட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சுமார் 25 கோர்ட்கள் செயல்பட்டு வந்தன. வழக்குகள் அதிகரிப்பு, புதிய சட்ட திருத்தங்கள் உள்ளிட்ட காரணங்களால், ஆண்டுதோறும் சிறப்பு மற்றும் கூடுதல் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில், 54 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், மதுக்கரையில் மாஜிஸ்திரேட் கோர்ட் திறக்கப்பட்டது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மட்டும், 42 நீதிமன்றங்கள் உள்ளன.கடந்த ஐந்தாண்டுகளில், 20க்கும் மேற்பட்ட புதிய கோர்ட்கள் திறக்கப்பட்டுள்ளன. புதிய கோர்ட்கள் திறக்க, தேவையான இடவசதி இல்லாத போது, அலுவலக அறைகள், நீதிமன்ற விசாரணை அறையாக மாற்றப்படுகின் றன.சிறிய அறைகளில் வக்கீல்கள், வழக்காடிகள் உட்கார கூட முடியாமல், இடநெருக்கடியால் தவிக்கின்றனர்.
புதிய கோர்ட்களை திறக்க ஐகோர்ட் உத்தரவிடும் போது, ஏதாவது ஒரு அலுவலக அறையை காலி செய்து விட்டு, தற்காலிக நீதிமன்ற அறையாக மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வேலை நாட்களில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கிறது. நீதிமன்றத்துக்கு வருபவர்கள், வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் திணறுகின்றனர்.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, சிறப்பு நீதிமன்றங்கள் அனைத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென, தொடர்ந்து பல்வேறு தரப்பினரால் கோரிக்கை வைக்கப்பட்டது.கலெக்டர் அலுவலக வளாகம் அருகிலுள்ள குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில், புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக, ஐகோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, பரிசீலனையில் உள்ளது.அந்த இடத்தில் புதிய நீதிமன்ற கட்டடம், விரைவில் கட்டப்பட்டால், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக இடநெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும்.

மூலக்கதை