ஓட்டுச்சீட்டுகள்! உள்ளாட்சி தேர்தலில் ஐந்து நிறங்களில்...இரண்டாம் நாள் வேட்பு மனு தாக்கல் மந்தம்

தினமலர்  தினமலர்
ஓட்டுச்சீட்டுகள்! உள்ளாட்சி தேர்தலில் ஐந்து நிறங்களில்...இரண்டாம் நாள் வேட்பு மனு தாக்கல் மந்தம்

கடலுார்:உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக 5 நிறங்களில் ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில், 2 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு 1,596 ஓட்டுச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு 1,292 ஓட்டுச்சாவடிகள் என, மொத்தம் 2,888 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.ஊரகப்பகுதிகளில் 7 லட்சத்து 18 ஆயிரத்து 728 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 26 ஆயிரத்து 184 பெண் வாக்காளர்களும், 63 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 44 ஆயிரத்து 975 ஆகும்.இதில் முதல்கட்ட ஓட்டுப்பதிவில் 8 லட்சத்து, 43 ஆயிரத்து 812 வாக்காளர்களும், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில் 6 லட்சத்து ஆயிரத்து 163 வாக்காளர்களும் ஓட்டளிக்க உள்ளனர்.இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது.
கடலுார் மாவட்டத்தில் 4 பதவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 244 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் குறைவாகவே இருந்தது. இம்முறை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக ஓட்டுச்சீட்டு முறை பயன்படுத்தப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், 4 விதமான ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில், ஒரு வார்டு ஓட்டுச்சாவடியாக இருந்தால் வெள்ளை நிறத்திலும், இரு வார்டு ஓட்டுச்சாவடிகளாக இருந்தால், இள நீல நிறத்திலும் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும்.
கிராம ஊராட்சி தலைவருக்கு இளஞ்சிவப்பு நிறமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு பச்சை நிறமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிற ஓட்டுச் சீட்டும் பயன்படுத்தப்பட உள்ளன.கடும் போட்டிநகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதிகளில், அதிகளவு வருவாய் தரும் பகுதியாக இருப்பதால் தலைவர் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பே வீடு வீடாக வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்க துவங்கி உள்ளனர். குறிப்பாக கோண்டூர், சாவடி, கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் சூடு பிடித்துள்ளது. அதேபோல், 5 நகராட்சியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.

மூலக்கதை