பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பாஜ எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் முதலிடம்

தினகரன்  தினகரன்
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பாஜ எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் முதலிடம்

புதுடெல்லி:  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் பட்டியலில் பாஜ எம்எல்ஏ, எம்பி.க்கள் முதலிடத்தில் உள்ளனர். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள எம்எம்ஏ.க்கள், எம்பி.க்கள் குறித்த விவரங்கள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், பாஜ.வை சேர்ந்த எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் 21 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. 2வது இடத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ, எம்பிக்களும் (16), மூன்றாவது இடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரசும் (7) இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிக்கிய மக்களவை எம்பி.க்களின் எண்ணிக்கை கடந்த 2009ம் ஆண்டில் இரண்டாக இருந்தது. இது தற்போது 19 ஆக அதிகரித்துள்ளது. 3 எம்பி.க்கள், 5 எம்எல்ஏ.க்கள் மீது பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு உள்ளதாக கடந்த 5 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பாலியல் பலாத்கார வழக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்ட 41 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக வழக்குகளில் சிக்கிய 66 வேட்பாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜ வாய்ப்பு தந்துள்ளது. இதேபோன்று காங்கிரஸ் கட்சியானது 46 பேருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. பகுஜன் சமாஜ் சார்பில் குற்றப் பின்னணி உடைய 40 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வேட்பாளர்களில் பெண்களுக்கு எதிரான குற்றப் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த 5 ஆண்டுகளில் 38ல் இருந்து 126 ஆக அதிகரித்துள்ளது. இது 231 சதவீதம் அதிகமாகும். மேற்கு வங்க மாநிலத்தில்  எம்எல்ஏ, எம்பிக்கள் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 12 எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் மீது வழக்குகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற வழக்குகள் உள்ள 572 வேட்பாளர்கள் மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் யாரும் தண்டனை பெறவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 410 வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்களில் 89 பேர் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 759 எம்பிக்கள், 4063 எம்எல்ஏக்கள் என மொத்தம் 4896 பேரின் பிரமாண பத்திரங்களில் 4822 பேரின் பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மூலக்கதை