காஷ்மீரில் தலைவர்களை விடுவிப்பது பற்றி உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்யும் :உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் தலைவர்களை விடுவிப்பது பற்றி உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்யும் :உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

புதுடெல்லி: ‘‘ஜம்மு காஷ்மீரில் சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்களை விடுவிப்பது குறித்து உள்ளூர் நிர்வாகம்தான் முடிவு செய்யும்,’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘ஜம்மு காஷ்மீரில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், எம்பி.க்கள், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உட்பட 3 முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோர்களை மத்திய அரசு எப்போது விடுவிக்கும்” என்றார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தேவைப்படும் நாட்களை காட்டிலும் ஒரு நாள் கூட கூடுதலாக அரசியல் தலைவர்களை சிறையில் வைக்க வேண்டிய அவசியமில்லை. அரசியல் தலைவர்களை விடுவிப்பது குறித்து உள்ளூர் நிர்வாகம் தான் முடிவு செய்யும். உள்ளூர் நிர்வாகம் அரசியல் தலைவர்களை விடுவிப்பதற்கான உரிய நேரம் என்று எப்போது கருதுகிறதோ, அப்போது அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது,” என்றார்.

மூலக்கதை