மாநிலங்களின் அதிகார பட்டியலில் உள்ள நீரை பொது பட்டியலுக்கு மாற்றும் திட்டம் இல்லை : ஜல் சக்தி அமைச்சர் ஷெகாவத் தகவல்

தினகரன்  தினகரன்
மாநிலங்களின் அதிகார பட்டியலில் உள்ள நீரை பொது பட்டியலுக்கு மாற்றும் திட்டம் இல்லை : ஜல் சக்தி அமைச்சர் ஷெகாவத் தகவல்

புதுடெல்லி: நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக தேசிய நீர்பாசன திட்டங்களை விரைவாக முடிக்க வலியுறுத்தி, மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் கே.வி.பி. ராமசந்திர ராவ் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் அளித்த பதிலில் கூறியதாவது: தற்போது மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருக்கும் நீரை, பொது பட்டியலுக்கு மாற்றம் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு கிடையாது. தண்ணீர் பிரச்னை என்பது மாநிலத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நீர் பிரச்னைகளில் மட்டுமே மத்திய அரசு தலையிடும். ஆறுகளை சுத்தப்படுத்துதல், அணைகள் கட்டுதல் ஆகியவற்றில் மட்டுமே ஜல்சக்தி அமைச்சகம் பொறுப்பேற்கும்.ஆந்திராவில் நிறைவேற்றப்படும் போலாவரம் நீர்பாசன திட்டத்துக்கு கடந்த 2014ல் மதிப்பிடப்பட்ட மொத்த தொகை 16 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த தொகையை மத்திய அரசு ஏற்கும் என கூறப்பட்டது. ஆனால், நில கையகப்படுத்தும் சட்டத்தில் நிலங்களுக்கான விலைகள் உயர்ந்தது உட்பட பல்வேறு காரணங்களால், தற்போது இந்த திட்டத்தின் மொத்த செலவுத் தொகை ₹55 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. மாநில அரசு இன்னும் முனைப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்த முன் வரவேண்டும். மத்திய அரசு இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

மூலக்கதை