குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்பது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கண்டனம்

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்பது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கண்டனம்

புதுடெல்லி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், ஜெயின்கள், பார்சி இனத்தவர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பா.ஜ வாக்குறுதி அளித்திருந்தது. இவர்கள் அனைவரும் அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களை சந்தித்ததால் இந்தியாவில் குடியேறிவர்கள். இது போன்று வெளிநாட்டில் இருந்து வரும் அகதிகள் 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்திருந்தால் மட்டுமே முன்பு குடியுரிமை வழங்கப்பட்டது. இதில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகள், 5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால், அவர்கள் குடியுரிமை வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களில் யாராவது சட்ட விரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் இந்தியாவில் வழக்கை சந்தித்திருந்தால், அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும். இந்த குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார். ஏறக்குறைய 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த நிலையில், குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திஇதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்பது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல். அதனை ஆதரிப்பவர்கள் நம் தேசத்தின் அடித்தளத்தை தாக்கி அழிக்க முயற்சிக்கின்றனர், என்று தெரிவித்துள்ளார்.பிரியங்கா காந்திகுடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மக்களவையில் நேற்று நள்ளிரவில் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், சகிப்பின்மை மற்றும் குறுகிய மனப்பான்மையை இந்தியா உறுதி செய்துள்ளது. நம்முடைய முன்னோர்கள் சுதந்திரத்துக்காக தங்களுடைய ரத்தத்தை, வாழ்க்கையைத் தியாகம் செய்தார்கள். சமத்துவ உரிமை, மதச்சுதந்திர உரிமை போன்றவற்றுக்காக மிகவும் கடினப்பட்டு சுதந்திரம் பெற்றோம். நம்முடைய அரசியலமைப்பு, நம்முடைய குடியுரிமை, வலிமையான ஒன்றுபட்ட இந்தியா அனைவருக்குமானது என்பதே நம்முடைய கனவுகள். நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தைத் திட்டமிட்டு அழிக்கும் இந்த அரசுக்கு எதிராக நாம் போராடுவோம். நம்முடைய நாடு நமக்கே உரித்தான அடிப்படைகளை விலக்கி நமது வலிமையால் உருவாக்கப்பட்டது, என கூறியுள்ளார்.

மூலக்கதை