டெல்லி நிர்பயா வழக்கு..: மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!

தினகரன்  தினகரன்
டெல்லி நிர்பயா வழக்கு..: மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!

டெல்லி: நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி அக்‌ஷய் தாகூர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 5 பேரில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாகூர், முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் வினய் ஷர்மா என்பவன் மட்டும் கருணை கோரி குடியரசு தலைவரிடம் மனு அளித்தான். அந்த கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார். இதனை தொடர்ந்து, கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது விதியாகும். எனவே, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாள்வரும் எந்நேரமும் தூக்கிலிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவனான அக்ஷய் தாகூர், தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தண்டனையை நிறைவேற்றுவது சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய குற்றவாளிகளின் வழக்கறிஞர், அக்‌ஷய் குமார் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால், மற்ற மூவரின் தரப்பில் இருந்து கியூரேட்டிவ் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தா, மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். இதுகுறித்து பேசிய திகார் சிறை அதிகாரி சந்தீப் கோயல், பவன் குப்தா திகார் சிறை எண் 2ல் அடைக்கப்பட்டிருந்தாக தெரிவித்துள்ளார். வினய் சர்மா திகார் சிறை எண் 4ல் உள்ளதாகவும், மற்ற இரு குற்றவாளிகளும் திகார் சிறையின் வெவ்வேறு சிறை அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை