குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் வலுக்கும் போராட்டம்: வீதிகளில் கடையடைப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் வலுக்கும் போராட்டம்: வீதிகளில் கடையடைப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திஸ்பூர்: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அசாம் மாநிலம் கவுஹாத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நேற்றிலிருந்தே போராட்டங்கள் வெடிக்க தொடங்கிவிட்டன. அதன் நீட்சியாக வடகிழக்கு மாநில மாணவர் சங்கமும், அனைத்து அசாம் மாணவர் அமைப்பும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவர் அமைப்பு சார்பில் 12 மணிநேர கடையடைப்பு  போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் கவுஹாத்தி, கோலாகட், திப்ருகர் உள்ளிட்ட இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வழக்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. பல்வேறு அமைப்பினரும் தொடர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தினால் எங்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் அசாமில் உள்ள சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இதனை எதிர்த்து தான் தற்போது நாங்கள் குடும்பத்துடன் போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மசோதா திரும்பபெறப்படவில்லை என்றால் மத்திய அரசுக்கு எதிராக எங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த முடிவு செய்து இருக்கிறோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேருந்துகள், வாகனங்கள் இயக்கப்படாததால் கவுஹாத்தியில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. போராட்டக்காரர்கள் சாலைகளில் ஆங்காங்கே டயர்களை தீயிட்டு கொளுத்தி வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டங்கள் வலுத்து வருவதால் கவுஹாத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க துணை ராணுவப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை