நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறைக்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறைக்கு மாற்றம்

டெல்லி: நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகள் நான்கு பேரும் டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து எந்நேரமும் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் பவன்குமார் குப்தா, மேகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்சய் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் வினய் ஷர்மா என்பவன் மட்டும் கருணை கோரி குடியரசு தலைவரிடம் மனு அளித்தான். அந்த கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார். இதனை தொடர்ந்து, கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது விதியாகும். இந்நிலையில் 4 பேரும் திடீரென திகார் சிறைக்கு மாற்றப்பட்டிருப்பதால் எந்நேரமும் அவர்கள் தூக்கிலிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, திகார் சிறையில் 4 குற்றவாளிகளும் கடும் பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நால்வரும் தனித்தனி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற சிறை கைதிகளால் இவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் இவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரை தூக்கிலிட பணியாளரை திஹார் சிறை ஏற்பாடு செய்கிறது. திஹார் சிறையில் தூக்கிலிடும் பணியாளர் இல்லாததால் பிற சிறைகளில் இருந்து பணியாளரை வரவழைக்க நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூக்குக்கயிறு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற பீகாரின் பக்ஜார் சிறை நிர்வாகத்திடம் 10 கயிறுகள் கேட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மூலக்கதை