‘நழுவாத கைகள்’ வேண்டும்: கேப்டன் கோஹ்லி கோபம் | டிசம்பர் 09, 2019

தினமலர்  தினமலர்
‘நழுவாத கைகள்’ வேண்டும்: கேப்டன் கோஹ்லி கோபம் | டிசம்பர் 09, 2019

திருவனந்தபுரம்: ‘‘மோசமாக பீல்டிங் செய்தால், எந்த ஒரு இலக்கை நிர்ணயித்தாலும் வெற்றி பெறுவது கடினம்,’’ என, இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. திருவனந்தபுரத்தில் நடந்த 2வது போட்டியில் இந்திய அணி (170/7, 20 ஓவர்) 8 விக்கெட் வித்தியாசத்தில் விண்டீசிடம் (173/2, 18.3 ஓவர்) வீழ்ந்தது. இதனையடுத்து தொடர் 1–1 என, சமநிலை அடைந்தது. மூன்றாவது போட்டி நாளை மும்பையில் நடக்கவுள்ளது.

இரண்டாவது போட்டியில் இந்தியாவின் ‘பீல்டிங்’ மோசமாக இருந்தது.புவனேஷ்வர் குமார் வீசிய 5வது ஓவரில் சிம்மன்ஸ், லீவிஸ் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்புகளை முறையே வாஷிங்டன் சுந்தர், விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் வீணடித்தனர். பின், தீபக் சகார்வீசிய 17வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் நழுவவிட்டார்.இப்படி இந்திய வீரர்களின் கைகளில் இருந்து பந்து அடிக்கடி நழுவியதால், விண்டீஸ் அணி எளிதாக வென்றது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியது: மோசமாக ‘பீல்டிங்’ செய்தால், இமாலய இலக்கை நிர்ணயித்தாலும் வெற்றி பெற முடியாது. கடந்த இரண்டு போட்டியிலும் இந்தியாவின் ‘பீல்டிங்’ மோசமாக இருந்தது ஏமாற்றம். ஒரே ஓவரில் 2 ‘கேட்ச்’ வாய்ப்புகளை வீணடித்தது பின்னடைவாக அமைந்தது. ஒருவேளை ‘கேட்ச்’ செய்திருந்தால், விண்டீஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். தற்போது இந்திய அணிக்கு துணிச்சலான ‘பீல்டிங்’ தேவைப்படுகிறது. மூன்றாவது போட்டி முக்கியமானது என்பதால், ‘பீல்டிங்கில்’ கூடுதல் கவனம் செலுத்துவோம்.

இந்திய அணி முதலில் ‘பேட்டிங்’ செய்த 15 ‘டுவென்டி–20’ போட்டிகளில், 7ல் தோல்வியடைந்தது என புள்ளி விவரம் கூறுகின்றது. இதனை ‘நம்பராக’ மட்டுமே பார்க்கிறேன். இப்போட்டியில் முதல் 16 ஓவரில், 140/4 என, வலுவான நிலையில் இருந்தோம். கடைசி 4 ஓவரில் போதிய ரன் சேர்க்காததால், மிகப் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.

இப்போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய ஷிவம் துபே சிறப்பாக பேட்டிங் செய்தார். இவரது அபார ஆட்டத்தினால் 170 ரன்கள் எடுக்க முடிந்தது. விண்டீஸ் அணியின் பந்துவீச்சு அருமை. எங்களை விட, அவர்கள் ஆடுகளத்தை நன்று புரிந்திருந்தனர்.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.

மூலக்கதை