‘டிவி’ நிகழ்ச்சி தயாரிக்கும் தோனி | டிசம்பர் 09, 2019

தினமலர்  தினமலர்
‘டிவி’ நிகழ்ச்சி தயாரிக்கும் தோனி | டிசம்பர் 09, 2019

மும்பை: இந்திய வீரர் தோனி, ‘பரம் வீர் சக்ரா’, ‘அசோக சக்ரா’ விருது வென்ற துணிச்சலான ராணுவ அதிகாரிகளின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ‘டிவி’ நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்கிறார்.

முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி 38. இந்தியாவுக்கு மூன்று வித உலக கோப்பை (2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர், 2013ல் சாம்பியன்ஸ் டிராபி) வென்று தந்த இவர், 2014ல் டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்கு மூன்று முறை (2010, 2011, 2018) கோப்பை வென்று தந்துள்ளார்.  இவருக்கு இந்திய ராணுவத்தில் இருந்து கவுரவ ‘லெப்டினன்ட் கர்னல்' பதவி வழங்கப்பட்டது. சமீபத்தில் இவர்,  காஷ்மீர் பகுதியில் துணை ராணுவத்தில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் தோனி, ‘பரம் வீர் சக்ரா’, ‘அசோக சக்ரா’ விருது வென்ற துணிச்சலான ராணுவ அதிகாரிகளின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ‘டிவி’ நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க உள்ளார். இது, இவரது முதல் ‘டிவி’ நிகழ்ச்சி. தற்போது எழுத்து பணியில் உள்ள இந்நிகழ்ச்சியானது, அடுத்த ஆண்டு துவங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் ‘ஹாட் ஸ்டார்’ செயலியில், சூதாட்ட சர்ச்சையில் இருந்து சென்னை அணி மீண்டு வந்து 2018ல் ஐ.பி.எல்., கோப்பை வென்றது தொடர்பாக ‘ரோர் ஆப் தி லயன்’ என்ற ஆவணப்படம் வெளியிட்டிருந்தார் தோனி. கடந்த 2016ல் தோனியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ‘தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற திரைப்படம் வெளியானது.

மூலக்கதை