தமிழக பவுலர்கள் ஏமாற்றம் * அரைசதம் விளாசிய ரகானே | டிசம்பர் 09, 2019

தினமலர்  தினமலர்
தமிழக பவுலர்கள் ஏமாற்றம் * அரைசதம் விளாசிய ரகானே | டிசம்பர் 09, 2019

 நத்தம்: தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் கர்நாடக அணி, முதல் நாளில் 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது.

இந்தியாவின் முதல் தர, 86வது ரஞ்சி கோப்பை தொடர் நேற்று துவங்கியது. 38 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. திண்டுக்கல் நத்தம் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்ற தமிழகம், கர்நாடக அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற கர்நாடகா பேட்டிங் தேர்வு செய்தது.

தேவ்தத் அபாரம்

கர்நாடக அணிக்கு மயங்க் அகர்வால் (43), நிஸ்சல் (4) ஜோடி துவக்கம் தர, கேப்டன் கருண் நாயர் 8 ரன் எடுத்தார். இதன் பின் தமிழக பவுலர்கள் ஏமாற்றம் தர, தேவ்தத் 78 ரன்கள் விளாசினார். தேஷ்பாண்டே (65) அரைசதம் அடித்தார். கர்நாடக அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. தமிழகம் சார்பில் சித்தார்த் அதிகபட்சம் 2 விக்கெட் சாய்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின், விக்னேஷ், பாபா அபராஜித் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

மும்பை ரன்மழை

மற்றொரு ‘பி’ பிரிவு போட்டியில் மும்பை, பரோடா அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணிக்கு பிரித்வி ஷா (66), ரகானே (79), கைகொடுத்தனர். முதல்நாள் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்தது.

ஜாபர் ‘150’

‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ஆந்திரா, விதர்பா மோதுகின்றன. இதில் தனது 150வது போட்டியில் களமிறங்கிய விதர்பா வீரர் வாசிம் ஜாபர், அதிக ரஞ்சி போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் ஆனார். தேவேந்திர பண்டேலா (145), அமோல் மஜும்தர் (136) அடுத்த இடங்களில் உள்ளனர்.

 

மைதானத்தில் பாம்பு

விதர்பா, ஆந்திரா மோதும் ரஞ்சி கோப்பை போட்டி விஜயவாடாவில் நடக்கிறது. நேற்று இப்போட்டிக்காக வீரர்கள் தயாராக இருந்த போது, மைதானத்தில் பாம்பு புகுந்தது. பராமரிப்பாளர்கள் பாம்பை அப்புறப்படுத்தினர். போட்டி துவங்க சிறிது தாமதம் ஆனது.

மூலக்கதை