'குட் - பை' ! பூந்தமல்லியில் 25 ஆண்டு குப்பை பிரச்னைக்கு....'பயோ மைனிங்' முறையில் அகற்றி சாதனை

தினமலர்  தினமலர்
குட்  பை ! பூந்தமல்லியில் 25 ஆண்டு குப்பை பிரச்னைக்கு....பயோ மைனிங் முறையில் அகற்றி சாதனை

பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியில், 25 ஆண்டுகளாக நிலவி வந்த குப்பை பிரச்னையை, 'பயோ மைனிங்' முறையில், முழுமையாக அகற்றி, சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நகராட்சிக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. பூந்தமல்லி நகராட்சி, 21 வார்டுகளை கொண்டது. அனைத்து வார்டுகளில் இருந்தும், நாள்தோறும், 21 டன் குப்பை சேகரமாகிறது. பூந்தமல்லி நகரம், பேரூராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே, பாரிவாக்கத்தில் உள்ள, 1.5 ஏக்கர் இடத்தில், குப்பை கொட்டப்பட்டு வந்தது. 25 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டதால், 20 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான குப்பை, மலை போல் தேங்கியது. இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன.
அடிக்கடி தீயிட்டு எரித்ததால், புகை மூட்டம் அதிகமாகி, அருகேயுள்ள மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.தொடர்ந்து, குப்பை கொட்டக்கூடாது என, எதிர்ப்பு எழுந்ததால், திருவேற்காடு கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்கிடையில், 1.87 கோடி ரூபாய் செலவில், குப்பையை, 'பயோ மைனிங்' முறையில் பிரித்து அகற்ற திட்டமிடப்பட்டது. 2018 ஆகஸ்டில், இப்பணி துவங்கியது. 'பயோ மைனிங்' என்பது, எளிய அறிவியல் முறைப்படி, விரைந்து முடிக்கக்கூடிய தொழில் வடிவம். பணியாளர்கள், குப்பையை கிளறி, இயந்திரத்தில் கொட்டுவர். 'கன்வேயர்' மூலம் செல்லும் போது, பிளாஸ்டிக், இரும்பு, மெட்டல், மண் உள்ளிட்டவை தனித்தனியாக பிரியும். மண், கல், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் சிமென்ட் பைகள் தனியாக பிரிக்கப்படும்.
இதில், மக்காத குப்பையான பிளாஸ்டிக், துணி ஆகியவை, சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும். இப்பணியின் போது, 'பயோ கல்சர்' முறையை பயன்படுத்தி, 'ப்ரீ பிராசசிங்' செய்யப்படுவதால், அருகே வசிக்கும் மக்களுக்கு, துர்நாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் தவிர்க்கப்படும். தற்போது, இப்பணி முடிந்து, குப்பை முழுமையாக அகற்றப்பட்டு, 1.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், குப்பையால் ஏற்பட்டு வந்த, சுகாதார பாதிப்புகளும் இனி இருக்காது. மீட்கப்பட்ட இடத்தில், குடிநீர் கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு, வார்டுகளுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வீடுகளில் இருந்து, பிரித்து வாங்கப்படும் குப்பையில், மக்கும் குப்பையை, உரம் தயாரிக்க பயன்படுத்துவர். மக்காத குப்பை சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும்.-நகராட்சி அதிகாரிகள், பூந்தமல்லி.

மூலக்கதை