'உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ., தயார்'

தினமலர்  தினமலர்
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ., தயார்

சென்னை : ''உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, பா.ஜ., தயாராக உள்ளது. இடங்கள் ஒதுக்கீடு தொடர்பாக, அ.தி.மு.க., உடன் பேச்சு நடத்தப் பட்டுள்ளது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பா.ஜ., சார்பில் வெளியிடப்படும், 'ஒரே நாடு' என்ற மாதம் இருமுறை நாளிதழின், 'மொபைல் ஆப்' நேற்று வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., மேலிட பார்வையாளர் முரளிதர ராவ், 'மொபைல் ஆப்' சேவையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி முடிந்த பின், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:பா.ஜ.,வின்'ஒரே நாடு' என்ற, மாதம் இருமுறை இதழின், 'மொபைல் ஆப்'பை பயன்படுத்தி, பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ விஷயங்களை அறிந்து கொள்ள லாம். நாடு முழுவதும் நடக்கும் செய்திகளின், உண்மை வடிவத்தை அறியலாம்.கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில், 15 தொகுதிகளில், பா.ஜ., 12 இடங்களை கைப்பற்றி, சாதனை படைத்துள்ளது. அந்த மாநில பா.ஜ.,விற்கும், முதல்வர் எடியூரப்பாவிற்கும், தமிழக பா.ஜ., சார்பில், தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து, அ.தி.மு.க., உடன் பேசியுள்ளோம். அவர்கள் நல்ல முறையில் அணுகினர். மாவட்ட அளவில், கருத்துக்கள் கேட்கும்படி கூறியுள்ளனர். அவர்களுடன் பேசி, இன்று முடிவெடுப்போம்.உள்ளாட்சி தேர்தல் நீண்ட காலத்திற்கு பின் அறிவிக்கப் பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் துவங்கி உள்ளது. தி.மு.க., நீதிமன்றத்தை அணுகியதற்கு, என்ன அச்சம் என்று தெரியவில்லை. தேர்தலை சந்திக்க பா.ஜ., தயாராக உள்ளது. நாடு பிரிக்கப்பட்டபோது, சில குறைகள் இருந்தன. இதையெல்லாம் மனதில் வைத்து, குடியுரிமை சட்ட திருத்தத்தை, மத்திய அரசு எடுத்து வந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை