நித்தியானந்தாவை 12ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்: போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
நித்தியானந்தாவை 12ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்: போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு: திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து ஆன்மிக பணியில் ஈடுபட்டார். நித்தியானந்தாவின் ஆன்மிக பேச்சில் பலர் மயங்கி அவரிடம் சீடர்களாக சேர்ந்தனர். பல நடிகைகளும் சீடராக சேர்ந்தனர். இந்நிலையில் ஆசிரமத்தில் பெண் சீடர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது என்றும், பெண் சீடர் ஆரத்திராவ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்றும் புகார்கள் எழுந்தன. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நித்தியானந்தா, தனக்கு ஆண்மைத்தன்மை கிடையாது என கூறினார். ஆனாலும் நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யும்படி உத்தரவிட்டது. இவ்வாறு தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டதால் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. திடீரென்று ‘‘நானே பரமசிவன்’’ என கூறும் வகையில் நித்தியானந்தாவின் இணையதளத்தில் கைலாசா பற்றிய விவரம் வெளியானது. இதுபோன்ற சூழ்நிலையில் நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்களில் ஒருவரான லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அம்மனுவில், \'போலி சாமியார் நித்தியானந்தா மீது ராம்நகர் நீதிமன்றத்தில் 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு விசாரணையின்போது நித்தியானந்தா ஆஜராகவில்லை. அவரின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் ஏதோ காரணத்தை கூறி காலத்தை கடத்தி வருகின்றனர். நித்தியானந்தா, கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளன. வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவு வாழ்க்கை நடத்துகிற நித்தியானந்தாவை கைது செய்வதற்கு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. லெனின் கருப்பனின் மனுவை விசாரித்த நீதிபதிகள், \'நித்தியானந்தாவை போலீசார் வரும் 12ம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மூலக்கதை