ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீடிக்கிறது: ஜனவரியில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீடிக்கிறது: ஜனவரியில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழகத்தின் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவது தொடர்பான வழக்கை ஜனவரியில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.  கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் எம்.அப்பாவுவும், அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ். இன்பதுரையும் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க.வின் இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகளையும் தி.மு.க.வின் எம்.அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடைசி மூன்று சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை தாக்கல் செய்ய தெரிவித்ததோடு, அவற்றை எண்ணியும் முடித்துள்ளது.இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அதிமுகவின் இன்பதுரை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்ததோடு, வழக்கை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்த நிலையில் இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா தலையிலான அமர்வில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில் டிசம்பர் 11ம் தேதி அதாவது நாளை தமக்கு முக்கிய வழக்கு உள்ளதால், ராதாபுரம் தொடர்பான  விசாரணையை வரும் 16ம் தேதியோ அல்லது வேறு தேதிக்கோ ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், முக்கிய வழக்குகளை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு இருப்பதால் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு ஜனவரி மாதத்தின் ஒரு தேதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார். இதனால் அடுத்த விசாரணை தேதி வரும் வரை தற்போது உள்ள தடை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை