சாத்தான் வேதம் ஓதுகிறது மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக ஆவேசம்

தினகரன்  தினகரன்
சாத்தான் வேதம் ஓதுகிறது மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக ஆவேசம்

புதுடெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசியதாவது:  நமது நாடு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு நாடு. அனைத்து குடிமக்களையும் நாம் பாதுகாக்க வேண்டும் என அரசியல்சாசன முன்னுரையில் உள்ளது. ஆனால், சிறுபான்மையினர் நலனுக்காக மத்திய அரசு எந்த சட்டமும் இதுவரை கொண்டுவரவில்லை. இந்த மசோதா ஒட்டுமொத்த நாட்டுக்கானது அல்ல. பாகிஸ்தான், வங்கதேசத்தை மனதில் வைத்து இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. 1082 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக இன்டர்நெட்டில் அறிந்தேன். இதில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள். இலங்கையில் இருந்து 13 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இது பற்றி இந்த மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  இலங்கையிலும் தமிழ் முஸ்லிம்கள் உள்ளனர். இலங்கை தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? உங்கள் சிந்தனை எல்லாம் முஸ்லிம்களை வெறு ப்பதில்தான் உள்ளது. மாலத்தீவிலும் இந்திய வம்சாவளியினர்  உள்ளனர். அவர்களும் குடியுரிமை கேட்கின்றனர். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன? முஸ்லிமாக இருப்பது குற்றமா? எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் மசோதாவில் கிறிஸ்தவர்களை சேர்த்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது. அவர்கள் மீது திடீர் அன்பு ஏன்? மேற்கத்திய நாடுகளுக்கு பயந்து நீங்கள் கிறிஸ்தவர்களை சேர்த்துள்ளது போல் தெரிகிறது. கிறிஸ்தவர்களை சேர்த்தது மகிழ்ச்சிதான். ஆனாலும், நீங்கள் சிறுபான்மையினரை பிரிக்க முயற்சிக்கிறீர்கள்? அமெரிக்காவில் திறமையானவர்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடின்றி கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. அது போல், வளமான இந்தியாவும் பாகுபாடின்றி, குடியுரிமை வழங்க வேண்டும்.  கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பற்றி இந்த மசோதாவில் நீங்கள் எதுவும் கூறவில்லை. கடவுள் நம்பிக்கையற்ற தஸ்லிமா நஸ்‌ரீனுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டது. உரிமைகள் இந்தியாவில் மதிப்பிக்கப்படுகிறது என்ற காரணத்தால், பலர் இந்தியா வர விரும்புகின்றனர். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கனியன் பூங்குன்றனார் கூறினார். உலகம் முழுவதும் என் நாடு. அனைவரும் என் உறவினர்கள் என அவர் கூறினார். நமது பிரதமர் ஐ.நா.வில் பேசும் போது இதை குறிப்பிட்டார். ஆனால் அவரை உள்துறை அமைச்சர் பின்பற்றவில்லை. இந்த உலகம் எனது குடும்பம் என்பதுதான் வாசுதேவ குடும்பகம். இதை வித்தியாசப்படுத்த நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்? நமது நாட்டில் 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். நீங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். பசு கடத்தல் என கூறி அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. கும்பல் தாக்குதல் நடக்கிறது. நீங்கள் சிறுபான்மையினரை ஆதரிப்பதாக சிலநேரங்களில் நீங்கள் கூறும்போது, அவர்கள் அதை நம்புவது இல்லை. சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. நீங்கள் பின்பற்றுவது மதரீதியிலான அடக்குமுறை. இந்த மசோதா நாட்டு நலனுக்கானது அல்ல. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அரசியல் சாசனத்துக்கு எதிரானது:குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி மனீஷ் திவாரி பேசியதாவது: இந்த மசோதா, அரசியல்சாசன விதிமுறைகளை மீறுவதாக உள்ளது. சமத்துவ உரிமை, பாகுபாடற்ற பாதுகாப்பு ஆகியவை குறித்து அரசியல் சாசன விதிமுறைகள் விளக்குகின்றன. ஆனால் அம்பேத்கர் கொண்டுவந்த அரசியல்சானத்துக்கு எதிராக இந்த மசோதா உள்ளது. மதரீதியிலான பாகுபாடு, அரசியல்சாசன முகப்புரையுடன் ஒத்துப்போகவில்லை. மதச்சார்பின்மை என்பது நமது அரசியல்சாசனத்தில் பொதிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவு: குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாத்தில் பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி, ‘‘இந்த மசோதாவை எங்கள் கட்சி ஆதரிக்கிறது. சில அம்சங்கள் மட்டும் கவலை அளிப்பதாக உள்ளது. அதை மத்திய அரசு சரிசெய்யும் என நம்புகிறோம்’’ என்றார்.

மூலக்கதை