கிழக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழப்பு: சூழலியல் நிபுணர்கள் தகவல்

தினகரன்  தினகரன்
கிழக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழப்பு: சூழலியல் நிபுணர்கள் தகவல்

நியூ சவுத் வேல்ஸ்: கிழக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழந்திருக்கலாம் என சூழலியல் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த ஒரு மாதமாக புதர் தீ எரிந்து வருகிறது. கொழுந்து விட்டு எரியும் இந்தத் தீ அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் பரவி, பல லட்சம் ஹெக்டேர் அளவிலான பகுதிகள் தீயில் பற்றி எரிகின்றன. இந்த தீயில் சிக்கி இதுவரை சுமார் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து, இடிந்து தரைமட்டமாகியுள்ளன. பல லட்சம் மரங்கள் கருகிவிட்டன. இதுவரை இல்லாத வகையில் சிட்னி உள்ளிட்ட பகுதிகளில் தீயானது அபாய அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயை அணைக்க முடியாமல் அந்நாட்டு தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர். மேலும், இந்த தீயினை தற்போதைக்கு அணைக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கிழக்கு ஆஸ்திரேலியாவின் வனப்பகுதியில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோலாக்கள் வாழ்ந்து வந்த நிலையில், அப்பகுதியில் கடந்த மாதம் துவங்கி தற்போது வரை கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுதீயில் சிக்கி, 25 சதவீதத்திற்கும் மேலான கோலாக்கள் உயிரிழந்திருப்பதாக சூழலியல் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் கட்டுக்கடுங்காத தீ நிலவி வருவதால், இறந்த கோலாக்களின் உடல்கள் கிடைப்பதும் கடினம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட, சிறிய கரடி போன்ற வடிவம் கொண்ட வனவிலங்கு கோலா, என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை