குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தியாவின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு: உள்நாட்டில் மட்டும் இன்றி அமெரிக்காவும் ஆட்சேபம்

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தியாவின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு: உள்நாட்டில் மட்டும் இன்றி அமெரிக்காவும் ஆட்சேபம்

டெல்லி: குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தியாவின் முயற்சிக்கு உள்நாட்டில் மட்டும் இன்றி அமெரிக்காவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு மூலமாக குடியுரிமை (திருத்தம்) மசோதா, 2019 பலத்த அமளிக்கிடையே மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறியது. இரவு 11.30 மணிக்குப் பின்னரும் மக்களவையில் மசோதா குறித்த விவாதம் கடுமையாக நீடித்தது. மசோதா நிறைவேறக்கூடாது என எதிர்க்கட்சிகள் விடாப்பிடியாக இருந்தன. அனல் பறந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சரமாரியாக பதிலளித்து 11.35க்கு தனது உரையை அமித்ஷா, ‘‘மோடி அரசுக்கு அரசியலமைப்பு மட்டுமே மதம். தேசிய குடிமக்கள் பதிவேடு வருகிறது’’, எனக் குறிப்பிட்டு முடித்தார். அதையடுத்து 11.41க்கு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து எதிர்ப்புகள் வீணான நிலையில், நள்ளிரவு 12.02 மணிக்கு 311 எம்.பிக்கள் ஆதரவுடன் குடியுரிமை சட்ட திருந்த மசோதா நிறைவேறியது. இதையடுத்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் செய்யப்படுகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்தியாவின் முயற்சிக்கு உள்நாட்டில் மட்டும் இன்றி அமெரிக்காவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. சசி தரூர்: இஸ்லாமியர்களை குறிவைத்து இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார். இதன் மூலம் நாட்டின் மதச்சார்பற்ற தன்மை குலைந்துவிடும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தருண் கோயாய்: குடியுரிமை திருத்த மசோதா அசாம் மாநிலத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடியது என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோயாய் தெரிவித்துள்ளார். இது தங்களது மக்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை கண்டிப்பாக பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார். ராஜ்நாத் சிங்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை மட்டுமே கணக்கில் கொண்டு குடியுரிமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே இந்திய மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுள்ளார். அமெரிக்கா: இந்தியாவின் குடியுரிமை திருத்த முயற்சிக்கு அமெரிக்காவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. மதப்பன்மை என்ற ஒற்றுமை நாடு முழுவதும், இரு நாடுகளுக்கு இருந்து வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. குடியுரிமைக்காக மதச் சோதனையை பயன்படுத்தினால் ஜனநாயகம் சீர்குலைந்துவிடும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ப.சிதம்பரம்: குடியுரிமை சட்டத்திருத்தத்தால் மத்திய பாஜக அரசு மோசமான விளைவுகளை சந்திக்கும் என்று முன்னாள் மத்திய அமைசச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு பதிலாக பிற நாடுகளை போல ஒரு முழுமையான அகதிகள் சட்டத்தை கொண்டு வரலாமே எனவும் கூறினார். அதைவிட்டு நாட்டை மோடி அரசு பிளவுபடுத்த பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். கே.எஸ்.அழகிரி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எச்செரித்துள்ளார். மத்திய பாஜக அரசின் பாசிச மனப்பான்மை இதன் மூலம் வெளிப்பட்டதாக கூறினார். தமிழக எதிர்க்கட்சிகள்: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாட்டில் யாரையும் யாரும் பிரித்து பார்க்க கூடாது என்பது அனைவரது வேண்டுகோளாக உள்ளது. 

மூலக்கதை