ஆந்திராவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம் நிறைவேற்றப்படும் என ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேச மாநிலங்களில் அதிகப்படியான குற்றங்கள் நடப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 1,050 என்ற வீதத்தில் குற்றங்கள் நடப்பதாகவும், பட்னாவில் 1,712 என்ற வீதத்தில் குற்றங்கள் நடக்கிறது என்றும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. டெல்லியை போல பெங்களூரு நகரமும் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்தூர் நகரம் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் கடந்த வியாழக்கிழமை காலையில் நீதிமன்ற விசாரணைக்காக செல்லும்போது, அவரை பலாத்காரம் செய்த இருவர் உட்பட 5 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். அந்த பெண் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். இதேபோல ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், \' பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் கடுமையான சட்டங்கள் ஆந்திராவில் கொண்டு வரப்படும். அது அவசியமான ஒன்றாகும். அதேபோல பெண்களுக்கு எதிராக பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் இரு பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகிய எனக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு தந்தையாக எவ்வாறு அதுபோன்ற சம்பவத்துக்கு எதிர்வினையாற்றுவது? என் மனவேதனையைத் தீர்க்க என்னவிதமான தண்டனையை அவர்களுக்கு வழங்க முடியும்? அது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். அதனால்தான் அந்த என்கவுன்ட்டர் நடந்தது. ஆனால், தவறு நடந்துவிட்டது போன்ற தோற்றத்தை ஊடகங்கள் காண்பிக்கின்றன. இதில் என்ன தவறு இருக்கு இந்த என்கவுன்ட்டர் செய்த தெலங்கானா போலீஸாருக்கும், முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் எனது பாராட்டுகள் என கூறினார். டெல்லியில் நிர்பயா கொல்லப்பட்ட பின் தான் கடுமையான சட்டம் கொண்டு வந்தோம். 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. சில நாடுகளில் இதுபோன்ற குற்றம் செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை 3 வாரங்களுக்குள் விசாரிக்க புதிய சட்டம் இயற்றப்படும். இச்சட்டம் நாளை (புதன்கிழமை) சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மூலக்கதை