பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: அமெரிக்கர்கள் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: அமெரிக்கர்கள் பங்கேற்பு

வாஷிங்டன்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய போராட்டத்தில் அமெரிக்கர்களும் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இதனால் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் தூதரக உறவு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதனால் இருநாடுகளிடையே நல்லுறவு சீர்கேடு அடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் கூடி விவாதம் நடைபெற்றது. எனினும் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது. ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச அமைப்புகளில் பிரச்னையை எழுப்பி, தோல்வி கண்டது. இந்நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்.,கை கண்டித்து, அமெரிக்க வாழ் காஷ்மீரி பண்டிட்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், வாஷிங்டனில் உள்ள பாக்., தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமெரிக்கர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் குறித்து, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதல்கள் குறித்து உலகம் அறியும். காஷ்மீரில் இருந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரி ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனப் படுகொலையை நடத்தியது, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளே. அதேபோல், பாக்., ஆதரவு பயங்கரவாதத்தால், உலகெங்கும் பல்வேறு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அதனால் தான், இந்தப் போராட்டத்தில் அமெரிக்கர்களும் பங்கேற்றனர் என கூறியுள்ளனர்.

மூலக்கதை