ஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு

ஐதரபாத்: ஆந்திராவில்  பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு புது முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநில அரசு மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக அனுமதி இல்லாமல் கிராமப் பகுதிகளில் சிறுசிறு பெட்டிக் கடைகளிலும் மது விற்பனை செய்யப்பட்டு வந்த பெல்ட் ஷாப் என்று அழைக்கக்கூடிய 43 ஆயிரம் கடைகளை முற்றிலும் மூடியுள்ளது. மேலும் 4 ஆயிரத்து 380 மதுக்கடைகளுக்கு தனியாருக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவை அனைத்தையும் ரத்து செய்து அரசு 20% மதுக்கடைகளை குறைத்து 3500 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. இந்த கடைகளையும் காலை 11 மணி முதல் 8 மணி வரை மட்டுமே விற்பனை செய்யும் விதமாக நேரம் குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி 1-ஆம் தேதி தனியாருக்கு  வழங்கப்பட்டிருந்த பார் லைசென்ஸ் 40 சதவீதம் குறைக்கப்பட்டு  உள்ளது. இதற்காக பழைய லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவு பெறும் விதமாக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மது அருந்துவதற்காக லிக்கர் கார்டு என்ற பெயரில் ஏடிஎம் கார்டை போன்று மைக்ரோசிப் பொருத்தப்பட்ட பிரிப்பைட் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த கார்டை பெறுவதற்கு ஆதார், பேன் கார்டு நகலை வழங்கி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இந்த கார்டு 25 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே இந்த கார்டு வழங்கப்பட உள்ளது. கார்டு வாங்கினால்  ஒரே நேரத்தில் கார்டில் உள்ள பணம் முழுவதிற்கும்  மது வாங்க நினைத்தால் அது முடியாது ஒரு கார்டை வைத்து மூன்று மது பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும்.இதுபோன்று புதிய நிபந்தனைகளுடன் கூடிய ப்ரீபெய்ட் மதுகார்டு விரைவில் ஆந்திர மாநில அரசு நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஏற்கனவே மது விலையை அதிக அளவில் உயர்த்தியுள்ள நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மது விற்பனை 23 சதவீதம் குறைந்திருப்பதாகவும் பீர் விற்பனை 54 சதவீதம் குறைந்து இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் விற்பனை குறைந்திருந்தாலும் விலையேற்றத்தின் காரணமாக அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறையவில்லை என்றாலும் மது குடிப்பவர்களுக்கு அதன் எண்ணத்தை மாற்றுவதற்காகவே இந்த விலை ஏற்றம் மற்றும் நிபந்தனைகள் என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

மூலக்கதை