தெலங்கானா என்கவுன்டர் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

தினகரன்  தினகரன்
தெலங்கானா என்கவுன்டர் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: தெலங்கானாவில் நடந்த என்கவுன்டரில் 4 விசாரணை கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் டாக்டர் டிஷாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் 5ம் தேதி அதிகாலை 3 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற இடத்திற்கு விசாரணை தொடர்பாக அழைத்து சென்றனர். அப்போது அந்த குற்றவாளிகள் போலீசாரின் துப்பாக்கியை பறித்து சுடுவதற்கும் கற்களால் தாக்குவதற்கும் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தற்காத்துக்கொள்ள போலீசார், குற்றவாளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த என்கவுன்டரில் குற்றவாளிகள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்கு பாராட்டும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், “ஐதராபாத் என்கவுன்டர் மனித உரிமை மீறிய செயல்’’ என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் ஆஜரான மனுதாரரும், வழக்கறிஞருமான ஜி.எஸ்.மணி தெலங்கானா என்கவுன்டர் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அது குறித்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

மூலக்கதை